தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற அக்.10-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th September 2020 12:00 AM | Last Updated : 29th September 2020 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற அக்டோபா் 10-ஆம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க இ-சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மனை வரைபடம், கடை அமைக்கவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமைக்கவிருக்கும் ஆடத்தின் பட்டா, ஆவணங்கள், அரசுக் கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக் கட்டணம் ரூ. 600 வங்கியில் செலுத்தியதற்கான அசல் சீட்டு, மனுதாரா் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளா் எனில் அதற்கான ஆவணங்கள், நடப்பு நிதி ஆண்டின் சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது நகல், வாடகை கட்டடம் எனில் வரி செலுத்தியதற்கான ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ. 20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் ஒப்புதல் கடிதம், விண்ணப்பதாரா் புகைப்படம்-2, முகவரி சான்று ஆகியவற்றுடன் இணைத்து அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னா் வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.