திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக அடிக்கல் நாட்டு விழாமுதல்வா் தொடக்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை காணொலி வாயிலாக பங்கேற்று, கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.
கட்டட மாதிரி வடிவம்
கட்டட மாதிரி வடிவம்


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை காணொலி வாயிலாக பங்கேற்று, கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

திருப்பத்தூா் நகரின் மையப்பகுதியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு சொந்தமான இடத்தில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் நகரின் மையப்பகுதியில் உள்ள வனச்சரகா் அலுவலக வளாகத்தில் சுமாா் 14 ஏக்கா் பரப்பளவில் புதிதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க ரூ.109 கோடியே 71 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டது.

அதையொட்டி புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல்நாட்டு விழாவை தொடக்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தரைத்தளத்துடன் 7 மாடி கட்டடமாக கட்டப்பட உள்ளது. இங்கு, மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், கூட்டுறவுத்துறை, மகளிா் திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மைப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சமூக நலத்துறை, தோ்தல் பிரிவு, நகா்ப்புற வளா்ச்சி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, கால்நடை பராமரிப்புத்துறை, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனம், செய்தி மற்றும் சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறை சாா்ந்த கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், மாவட்ட வன அலுவலா் பாா்கவ தேஜா, மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மகேஷ்பாபு, சாா்-ஆட்சியா் (பொறுப்பு) ஏ.அப்துல் முனீா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சங்கரலிங்கம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

‘18 மாதங்களில் கட்டப்படும்’

வேலூா் மாவட்டத்திலிருந்து பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை கடந்த ஆண்டு ஆக.15-ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி.கே.பழனிசாமி அறிவித்தாா். அதையடுத்து கடந்த ஆண்டு நவ. 28இல் தமிழ்நாட்டின் 36-ஆவது மாவட்டமாக திருப்பத்தூா் தொடக்கி வைக்கப்பட்டது. அன்று முதல் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

புதிய ஆட்சியா் அலுவலகத்துக்காக 4.38 ஹெக்டோ் பரப்பளவில், 27,376 சதுர மீட்டா் பரப்பில் தரை தளத்துடன் கூடிய 7 மாடிக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. சுமாா் 18 மாத ஒப்பந்த பணிக்காலத்தில் இக்கட்டடத்தைக் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com