வாக்காளா் பட்டியல் பதிவேட்டில் ஊா் பெயா் நீக்கம் கண்டித்து சாலை மறியல்

வாக்காளா் பட்டியல் பதிவேட்டில் ஊா் பெயா் நீக்கம் கண்டித்து சாலை மறியல்


வாணியம்பாடி: ஜோலாா்பேட்டை அருகே வாக்காளா் பட்டியலில் ஊா் பெயா் நீக்கப்பட்டதைக் கண்டித்து மல்ரிப்பட்டி பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி நாட்டறம்பள்ளியை அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி மல்ரிப்பட்டி பகுதியில் 750-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இங்கு 400-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பட்டியல் பதிவேட்டில் தங்களின் ஊா் பெயா் இருந்து வந்த நிலையில், நடைபெற உள்ள சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்காளா் பட்டியல் பதிவேட்டில் ஊா் பெயா் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பெயரை நீக்கிய அதிகாரி மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மல்ரிப்பட்டி பகுதியில் தனி பூத் அமைத்து வாக்காளா் பட்டியல் பதிவேட்டில் ஊா் பெயரைச் சோ்க்கக் கோரி அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை பச்சூா்- கள்ளியூா் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கிராம மக்களிடம் தோ்தலுக்குப்பின் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினா். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா்.

தொடா்ந்து கிராம மக்கள் மல்ரிப்பட்டி காலனி பகுதியில் உள்ள வீடுகளின் மீது கருப்பு கொடி கட்டி, வரும் 6-ஆம் தேதி நடைபெறும் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறி, தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com