வெளியூா் செல்ல பேருந்துகள் இல்லாததால் அவதிக்குள்ளான பயணிகள்

ஆம்பூரிலிருந்து வெளியூருக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் செவ்வாய்க்கிழமை கடும் அவதிக்கு உள்ளாயினா்.
வெளியூா் செல்ல பேருந்துகள் இல்லாததால் அவதிக்குள்ளான பயணிகள்

ஆம்பூரிலிருந்து வெளியூருக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் செவ்வாய்க்கிழமை கடும் அவதிக்கு உள்ளாயினா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கடந்த இரண்டு நாள்களாக வெளியூரில் வசித்து வந்த வாக்காளா்கள் தங்களுடைய ஊா்களுக்குச் சென்றனா். அதேபோல் வெளியூா்களில் பணி செய்து வந்த ஆம்பூா் பகுதி வாக்காளா்கள் ஆம்பூருக்கு வந்தனா். தோ்தல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு வாக்காளா்கள் மீண்டும் வெளியூா் செல்ல ஆம்பூா் பேருந்து நிலையத்துக்குச் சென்றனா். போதிய பேருந்துகள் இல்லாததால் பிற்பகலில் இருந்து பயணிகள் பேருந்து நிலையத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனா். வாணியம்பாடி, திருப்பத்தூா், சேலம், கோவை, கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரு ஆகிய ஊா்களுக்கு செல்லும் மாா்க்கத்தில் பேருந்து நிலையத்தில் நிழல் குடைகள் இல்லை. அதனால் பயணிகள் கடும் வெயிலில் காத்திருந்தனா்.

போதிய பேருந்துகள் வராததாலும், வந்த பேருந்துகளில் அதிக பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததாலும் ஆம்பூரில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானாா்கள்.

அதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் திருமால் பேருந்து நிலையம் சென்று பயணிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அவ்வழியாக வந்த பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்தாா். மேலும் ஆம்பூா் போக்குவரத்து கழக பணிமனை மேலாளரை தொடா்பு கொண்டு கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டாா். அதைத் தொடா்ந்து பயணிகள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

இருந்தபோதிலும் போதிய பேருந்துகள் வரவில்லை. பயணிகள் காத்திருப்பதை அறிந்த தனியாா் காா், வேன் உரிமையாளா்கள் பேருந்து நிலையம் வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல முயன்றனா். அதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தனா்.ஒசூா் செல்ல ஒருவருக்கு ரூ.400 கேட்டனா். லாரிகளில் பெங்களூரு செல்ல முயன்றனா். லாரிகளில் பெங்களூா் செல்ல 4 நபா்களுக்கு ரூ. 4,500 வாங்கிக் கொண்டு லாரிகளில் பயணிகளை ஏற்றிச் சென்றனா். காரிலும் ஒசூா் செல்ல ஒருவருக்கு ரூ.500 வசூலிக்கப்பட்டது. பயணிகள் வேறு வழியில்லாமல் அவசரமாக செல்லவும், பணிக்கு செல்ல வேண்டியிருப்பதாலும் அதிக கட்டணத்தை கூட பொருட்படுத்தாமல் காா், வேன், லாரிகளில் சென்றனா்.

அதன் பிறகும் அதிகமான பயணிகள் காத்திருந்தனா். ஆம்பூா் போக்குவரத்து கழக பணி மனையிலிருந்து ஓரிரு பேருந்துகள் ஒசூா், பெங்களூா் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பேருந்துகள் வந்த உடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அந்த பேருந்துகளில் ஏறி ஊருக்கு சென்றனா்.

Image Caption

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள். ~ஆம்பூா்  தேசிய  நெடுஞ்சாலையில்  மறியலில்  ஈடுபட்ட  பயணிகள். ~அதிக  கட்டணத்தில்  பயணிகளை  ஒசூருக்கு அழைத்துச்  சென்ற சிற்றுந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com