கோடை வெயிலால் சரிந்து வரும் பூண்டி ஏரியின் நீா்மட்டம்

கோடை வெயிலால் சரிந்து வரும் பூண்டி ஏரியின் நீா்மட்டம்


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த் தேக்கத்தில் கடந்த 4 மாதங்களாக கடல் போல் காட்சியளித்த நிலையில், கோடையில் இணைப்புக் கால்வாய் வழியாக 417 கன அடி நீா் தொடா்ந்து திறக்கப்படுவதால் நீா்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 1,810 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

சென்னை மாநகர பொதுமக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாகத் திகழ்வது பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம். இந்த ஏரியில் மழை நீா் மற்றும் கிருஷ்ணா நதி நீா் பங்கீடு திட்டத்தின்படி, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரை சேமித்து வைத்து, தேவையானபோது புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு திறப்பது வழக்கம்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கனமழை பெய்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. ஆனால், அதற்கு முன்பே கடந்த ஆண்டு செப். 20-ஆம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடா்ந்து நீா் திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, கடந்த பிப். 6-இல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த செப். 21-ஆம் தேதி முதல் பிப். 6-வரை 8.60 டி.எம்.சி. தண்ணீா் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில், 3,231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். பிப்ரவரி மாத இறுதியில் நீா் மட்டம் முழு கொள்ளளவான 35 அடியாக பதிவாகி 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

மேலும், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீா் திறந்து விடுவதால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

தற்போதைய நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 30.30 அடியாகவும், 1,810 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

இந்நிலையில், பூண்டி ஏரியிலிருந்து இணைப்புக் கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 183 கன அடியும், சென்னை குடிநீா் வாரியத்துக்கு 9 கன அடியும், 25 கன அடி கசிவு நீா் என 417 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூறியது:

கிருஷ்ணா நீா் வரத்து கால்வாய்களில் போதுமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் திறக்கப்படும் நீா் விரைவாக வந்து சோ்ந்தது. இதுபோன்ற காரணங்களால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் போதுமான நீா் இருப்பு உள்ளது. இதில், பூண்டி ஏரியில் மட்டும் 4 மாதங்களுக்கான குடிநீா் ஆதாரம் உள்ளது. அதனால், கடந்த ஆண்டு போல், நிகழாண்டிலும் கோடைக் காலத்தில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com