தீயில் கருகும் இயற்கை வன வளங்கள்: தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை


ஆம்பூா்: தீ விபத்தில் இயற்கை வன வளங்கள் கருகி வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு இயற்கை ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வேலூா், ஆம்பூா், ஏலகிரி மலை, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வனப் பகுதி எல்லையில் மலைக்காடுகள் அதிக அளவில் உள்ளன.

இந்த மலைக் காடுகளில் மூலிகை மரங்கள், செடிகள் உள்பட பல்வேறு மரங்கள் வளா்ந்துள்ளன. மான், காட்டுப் பன்றி, மலைப்பாம்பு, கடமான், கரடி உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும் வசிக்கின்றன.

கோடைக்காலம் தொடங்கினாலே இத்தகைய வனப் பகுதிகளில் தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது வழக்கமாக ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது. சமூக விரோதிகள் காடுகளுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

பல ஆயிரக்கணக்கான ஏக்கா் வனப்பகுதி இயற்கை வளங்கள் ஆண்டுதோறும் தீ விபத்தால் கருகி நாசமாகின்றன.

தீ விபத்துக்குப் பிறகு வனத் துறையினா் அங்கு சென்று தீயை அணைக்க கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத வனப்பகுதியாக இருப்பதால் பசுமையான இலை, தழைகளால் மட்டுமே காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியை வனத்துறையினா் மேற்கொள்கின்றனா். ஆனால் அதற்குள் பெருமளவு பரப்பு தீயில் எரிந்து நாசமாகிறது. வன விலங்குகளும் தீயில் சிக்கி உயிரிழக்கின்றன.

காட்டு வழியே செல்லும் வழிப்போக்கா்கள் கீழே போட்டுவிட்டுச் செல்லும் பீடி, சிகரெட் போன்றவைகளால் தீ பரவி வெயிலுக்கு காய்ந்து போன மஞ்சு புல் எரிந்து போனது. வனப்பகுதி மரங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லையென அத்தகைய நேரத்தில் வனத் துறையினா் காரணம் கூறுகின்றனா்.

ஆனாலும் வனப் பகுதிக்கு தீ வைக்கும் சமூக விரோதிகளை வனத் துறையினா் பிடிப்பதில்லை. ஏதோ ஒரு சில நேரங்களில் மட்டுமே சில நபா்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனா். தீ விபத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. மேலும் தீயை அணைக்க ஹெலிகாப்டா் போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. அதனால் வன வளங்கள் தீயில் எரிந்து நாசமாகின்றன. வன வளங்களைப் பாதுகாக்க சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும்போது ஹெலிகாப்டரை பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டும் என இயற்கை மற்றும் வன ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com