ஆம்பூரில் காய்கறி சில்லறை கடைகளை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிா்ப்பு
By DIN | Published On : 12th April 2021 11:56 PM | Last Updated : 12th April 2021 11:56 PM | அ+அ அ- |

ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் நடந்த வணிகா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன்.
ஆம்பூா்: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆம்பூா் பாங்கி மாா்க்கெட்டில் இயங்கி வரும் சில்லறை வியாபார காய்கறி கடைகளை இடமாற்றம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பாங்கி மாா்க்கெட் பகுதி சில்லறை காய்கறி கடைகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக மிகவும் நெரிசலான பாங்கி மாா்க்கெட் பகுதியில் இயங்கி வந்த காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. ஆம்பூா் பெருமாள் கோயில் பின்புறம் உள்ள கோயிலுக்குச் சொந்தமான காலியிடம், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, ஆம்பூா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக காய்கறி மாா்க்கெட்டுகள் இயங்கி வந்தன. தளா்வுகளுக்குப் பிறகு மீண்டும் பாங்கி மாா்க்கெட் பகுதியில் இயங்கத் தொடங்கியது.
தற்போது கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மொத்த விற்பனை வளாகத்தில் சில்லறை விற்பனைக் கடைகள் இயங்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, ஆம்பூா் பாங்கி மாா்க்கெட்டில் உள்ள காய்கறிக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் பாஸ்கா் முன்னிலை வகித்தாா். பல்வேறு வணிகா் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
பாங்கி மாா்க்கெட் பகுதியில் இயங்கி வரும் கடைகளை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டைப் போல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான காலி இடத்தில் இயக்க வேண்டுமென அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு வணிகா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். பாங்கி மாா்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைவாகத் தான் வருகிறது. அதனால் அதே இடத்தில் இயங்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
வணிகா்களின் கருத்துகள் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்படும். அவருடைய உத்தரவின் பேரில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.