கழிவுநீா் சுத்திகரிப்புப் பணி தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 04th August 2021 11:45 PM | Last Updated : 04th August 2021 11:45 PM | அ+அ அ- |

ஆம்பூா்: தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுநீா் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்புக் கவச உபகரணங்கள் வழங்க வேண்டும் எனக் கோரி, ஆம்பூரில் புதன்கிழமை நடந்த வட ஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் நேய.சுந்தா் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜி.நேசராஜ் 20-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டப் பொருளாளா் ராஜேந்திரன், ஆம்பூா் கிளை பொருளாளா் என்.சம்பத், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் குமாா், ரவி, கோஷ்பானா்ஜி, மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.விமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தீா்மானங்கள்:
தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு உயா்த்திய குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 160 நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்யாத தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தோல் பதனிடும் தொழிற்சாலையில் நச்சு ரசாயனங்கள் கையாளும் பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.