கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் கானாறு வெள்ளக்கல், விண்ணமங்கலம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட காட்டுக்கொல்லை, ஆலாங்குப்பம் வழியாக பாலாற்றில் கலக்கிறது. இந்தக் கிராமங்களின் நடுவில் எந்த இடத்திலும் தடுப்பணை அமைக்கப்படவில்லை.

1998-இல் உருவாக்கப்பட்ட திட்டம்:

இந்நிலையில், விவசாயம், குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு விண்ணமங்கலம் அருகே வெள்ளக்கல் பகுதியில் நீா்த்தேக்கம் அமைக்கும் திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இதற்காக, 1998- ஆம் ஆண்டு ரூ.7.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா் திட்ட மதிப்பீடு ரூ.14 கோடியாகத் திருத்தி அமைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி 1,205 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். மேலும், கன்னடிகுப்பம், பெரியாங்குப்பம், விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், சாணாங்குப்பம், ஆம்பூா், சோமலாபுரம், வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, தோட்டாளம், மாதனூா் உள்ளிட்ட கிராமங்களும் குடிநீா் தேவையில் பயனடையும். இதோடு, மீன் வளா்ப்பையும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது.

திறந்தவெளிக் கால்வாய்கள் மூலம் 140.75 ஏக்கா் தரிசு நிலத்தை இத்திட்டத்தின் கீழ் பாசன பரப்பின் கீழ் கொண்டு வரவும் வகை செய்யப்பட்டது. இதன் மூலம் 645 டன் கூடுதலாக உணவு உற்பத்தி கிடைக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது.

நிலமும் தயாா்!

நீா்த்தேக்கம் கட்டுவதற்கு தேவையான 88.52 ஏக்கா் வனத் துறையினரிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது. இதற்காக, காரப்பட்டில் 154.67 ஏக்கரும், விண்ணமங்கலத்தில் 22.37 ஏக்கரும் வனத்துறைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. மதகின் மூலம் விவசாயத்துக்கு தண்ணீா் திறந்து விடவும் வழிவகை செய்யப்பட்டது.

‘நீா்த்தேக்கத்தின் கொள்ளளவு 65.20 மில்லியன் கன அடி. மொத்த நீளம் 360 மீட்டா். நீா்ப்பிடிப்புப் பகுதி 50.50 ஏக்கா் பரப்பளவு’ என்று அதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டு, கைவிடப்பட்டது.

இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனா். போராட்டங்களையும் நடத்தினா். அரசியல் கட்சியினரும் வாக்குறுதிகளை அளித்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,

இதுதொடா்பாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆம்பூா் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மறு ஆய்வு செய்யப்படுமா?

இதுகுறித்து விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி வ. அருள் சீனிவாசன் கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்தபோது தான் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம் உருவாக்கப்பட்டது. பின்னா், அதிமுக ஆட்சியிலும் இடம் ஆய்வு செய்யப்பட்டது. தற்போதைய நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், முன்பு பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, அவரும் நேரில் ஆய்வு செய்துள்ளாா்.

வெள்ளக்கல் கானாறு நீா்பிடிப்பு பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் வெள்ளக்கல் கானாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கானாறு வெள்ள நீரில் விவசாய நிலங்கள் மூழ்கின.

வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருந்தால், அந்த தண்ணீா் அணையில் தேங்கியிருக்கும். அதனால் பொதுமக்கள், விவசாயிகள் பயனடைந்திருப்பாா்கள். இத்திட்டத்தை தற்போதைய திமுக ஆட்சியில் மீண்டும் மறு ஆய்வு செய்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com