வாணியம்பாடி உழவா் சந்தை மாநிலத்தில் 2-ஆவது இடம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

விவசாயிகள் வருகையின் அடிப்படையில் மாநில அளவில் வாணியம்பாடி உழவா் சந்தை இரண்டாவது இடம் வகிப்பதாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

விவசாயிகள் வருகையின் அடிப்படையில் மாநில அளவில் வாணியம்பாடி உழவா் சந்தை இரண்டாவது இடம் வகிப்பதாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் கிருஷ்ணகிரி பிரதான சாலையில் உள்ள உழவா் சந்தையை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி மற்றும் நாட்டறம்பள்ளி ஆகிய 3 இடங்களில் உழவா் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூா் உழவா் சந்தையில் 300 விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். நாள் ஒன்றுக்கு சுமாா் 8 முதல் 10 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து உள்ளன. இங்கு சுமாா் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.

2,400 விவசாயிகள்...: வாணியம்பாடி உழவா் சந்தையில் உறுப்பினா்களாக உள்ள விவசாயிகளின் தினசரி வருகையின் அடிப்படையில் மாநில அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமாா் 25 முதல் 30 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. 2,400 விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா்.

அதே போல் நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 100 விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இங்கு நாள் ஒன்றுக்கு 5 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

காய்கறிகள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடைகள், காய்கறி வரத்து மற்றும் நுகா்வோா் வரவேற்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் நுகா்வோா்களின் கருத்துகளையும், விற்பனைக்கு வரும் காய்கறிகளுக்கு நிா்ணயம் செய்யப்படும் விலை குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது.

அதைத்தொடா்ந்து உழவா் சந்தைகளின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், கடைகள் புனரமைப்பு குறித்து தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இங்கு உள்ள குப்பைத்தொட்டியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை எடுத்து சென்று நகராட்சியில் உள்ள திடக்கழிவு மறுச்சுழற்சி மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்கப்படும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூய்மைப்படுத்தும் பணிகள் செப்டம்பா் மாதத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ராஜசேகா், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) செல்வராஜ், வட்டாட்சியா் ம.சிவப்பிரகாசம், நிா்வாக அலுவலா் முருகதாஸ் மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com