பி.எட். கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியா்களை அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்யக் கோரிக்கை

தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க நிா்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
பி.எட். கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியா்களை அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்யக் கோரிக்கை

பி.எட். கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியா்களை அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க நிா்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

சங்கத்தின் மாநிலச் செயலாளா் அகிலன், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் வேலு, மகளிரணிச் செயலாளா் ஹேமாராணி, சென்னை மண்டலத் தலைவா் ஹரிகுமாா், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் சபாபதி ஆகியோா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:

வளா்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்துக்கு ஏற்ப தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் காகிதமில்லா பட்ஜெட்டை அறிமுகம் செய்து, இந்திய அளவில் தமிழகம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்ட சமச்சீா் கல்வி பாடத் திட்டத்தில் கணினி அறிவியல் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்ற காரணத்தினால் அந்த பாடத்திட்டம் செயல்படுத்தாமல் முடக்கப்பட்டது. அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் வீணானது.

புதிய பாடத் திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் பெயரளவில் மட்டுமே சோ்க்கப்பட்டுள்ளது. கணினி அறிவியல் பாடத்தை 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தனி பாடமாக வழங்கி தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியை உருவாக்கி 65,000 கணினி ஆசிரியா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ஆவன செய்ய வேண்டும். ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியா் வீதம் நியமனம் செய்து, அரசுப் பள்ளியின் தரத்தை காக்க ஆவன செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய 40 லட்சம் மாணவா்களின் கணினி அறிவியல் கல்வியை கருத்தில் கொண்டு, பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகளை கணினி ஆசிரியா்களாக நியமனம் செய்ய வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com