வழிப்பாதை திடீா் துண்டிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 27th February 2021 11:34 PM | Last Updated : 27th February 2021 11:34 PM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே வழிப்பாதை துண்டிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூா்குப்பம் கூல்காரன் வட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்குச் சொந்தமான இடத்தின் வழியாகச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை நில உரிமையாளா்கள் திடீரென பொதுமக்கள் சென்று வந்த வழிப்பாதையில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டினா். இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோா் மாலை 4 மணியளவில் வழிப்பாதையை துண்டித்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் வழிப்பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக்கூறி, ஆத்தூா்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். சாா்-ஆட்சியரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனா்.