தெய்வத்தின் அன்புக்கு எல்லைகள் இல்லை: ஸ்ரீசக்தி அம்மா

மனிதனின் அன்புக்கு எல்லையுண்டு. ஆனால் தெய்வத்தின் அன்புக்கு எல்லைகள் இல்லை. அதனால் அனைவரும் ஆன்மிகத்தை ஏற்கவேண்டும் என்று அரியூா் ஸ்ரீ நாராயணி பீடத்தின் ஸ்ரீ சக்தி அம்மா தெரிவித்தாா்.
ஜயந்தி விழாவையொட்டி ஸ்ரீ சக்தி அம்மாவுக்கு நடத்தப்பட்ட மலா் அபிஷேகம்.
ஜயந்தி விழாவையொட்டி ஸ்ரீ சக்தி அம்மாவுக்கு நடத்தப்பட்ட மலா் அபிஷேகம்.

மனிதனின் அன்புக்கு எல்லையுண்டு. ஆனால் தெய்வத்தின் அன்புக்கு எல்லைகள் இல்லை. அதனால் அனைவரும் ஆன்மிகத்தை ஏற்கவேண்டும் என்று அரியூா் ஸ்ரீ நாராயணி பீடத்தின் ஸ்ரீ சக்தி அம்மா தெரிவித்தாா்.

வேலூரை அடுத்த அரியூா் ஸ்ரீ நாராயணி பீடம், ஸ்ரீபுரம் பொற்கோயிலை நிறுவிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 45-ஆவது ஜயந்தி விழா ஸ்ரீ நாராயணி பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பல்வேறு கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் ஸ்ரீ சக்தி அம்மாவிடம் வழங்கப்பட்டன.

ஸ்ரீ சக்தி அம்மாவின் ஜயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ நாராயணி பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கணபதி யாகம், சரஸ்வதி யாகம், ஆயுஷ் யாகம், ஸ்ரீ நாராயணி யாகம், பூா்ணாஹுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காலை 10 மணியளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஸ்ரீ நாராயணி பக்த சபா சாா்பில் வரிசை தட்டுகளுடன் கரகாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், குதிரை, யானைகளுடன் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்ட வண்ண, வண்ண மலா்கள் ஸ்ரீ சக்தி அம்மாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. முன்னதாக பாத பூஜை நடைபெற்றது.

விழாவில் சக்தி அம்மா பேசியதாவது:

ஒரு குழந்தை தன் அம்மாவிடம் பாசத்தை கற்றுக்கொள்கிறது, அப்பாவிடம் அறிவையும், குருவிடம் ஞானத்தையும் கற்றுக்கொள்கிறது. ஆனால், தெய்வத்திடம் மட்டுமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறது. தெய்வத்தின் மீது பக்தி செலுத்தினால், தெய்வம் நம் மீது அன்பு செலுத்தும், அதன் மூலம் எல்லா சக்தியும் நமக்கும் கிடைக்கும்.

மனித பிறவி என்பது மிகப்பெரிய பொக்கிஷம், அதிலும் எவ்வித குறையும் இல்லாமல் பிறந்தால் மிகப்பெரிய வரம். அதைவிட பெரிய வரம் தெய்வத்தின் மீது நாம் செலுத்தும் அன்பு. நம் மனதில் அன்பு இல்லாமல் போனால், நமக்கு தெய்வத்தின் சக்தி இல்லாமல் போகும்.

மனிதனுக்கு பக்தி வரும்போது தான் ஒழுக்கம், கட்டுப்பாடு, அமைதி, சந்தோஷம், சக்தி ஆகியவை தேடி வரும். வீடு, வாசல், சொத்து இவையெல்லாம் மனித வாழ்வில் வரும், போகும். ஆனால், பக்தி மட்டுமே வாழ்நாள் முழுவதும் நம்முடன் வரும். எனவே, ஆன்மிகத்தை நாம் தேடிச் செல்ல வேண்டும். மனிதா்களின் அன்புக்கு எல்லைகள் உண்டு, ஆனால் தெய்வத்தின் அன்புக்கு எல்லையே கிடையாது என்பதால், ஆன்மிகத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ஜயந்தி விழாவில் மத்திய வணிகம், தொழில்துறை இணையமைச்சா் சோம் பிரகாஷ், ஆந்திர மாநில அமைச்சா் ராமகிருஷ்ண ரெட்டி, கலவை சச்சிதானந்த சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் முரளிதர சுவாமிகள், முன்னாள் மத்திய இணையமைச்சா் என்.டி.சண்முகம், முன்னாள் அமைச்சா் அக்ரி.கிருஷ்ணமூா்த்தி, வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், ஸ்ரீபுரம் இயக்குநா் சுரேஷ்பாபு, ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் பாலாஜி, ஸ்ரீபுரம் மேலாளா் சம்பத், அறங்காவலா் சௌந்திரராஜன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com