வாணியம்பாடியில் தோல் தொழில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம்: காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட தோல் துறைக்கான திறன் மேம்பாட்டு மையத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
வாணியம்பாடியில் தோல் துறைக்கான பல்நோக்கு திறன்மேம்பாட்டு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உள்ளிட்டோா்.
வாணியம்பாடியில் தோல் துறைக்கான பல்நோக்கு திறன்மேம்பாட்டு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உள்ளிட்டோா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட தோல் துறைக்கான திறன் மேம்பாட்டு மையத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம், மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கூட்டு முனைப்புடன் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கட்டடம் சீரமைப்பு, அலுவலகம், கணினி அறைகள், பயிற்சி வகுப்பறைகள், உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ள தோல் துறைக்கான பல்நோக்கு திறன்மேம்பாட்டு மையம் வாணியம்பாடி நகராட்சி கோணாமேடு பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

வாணியம்பாடியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்து, திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:

இந்திய அளவில் தோல் பொருள்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் திருப்பத்தூா் மாவட்டம் 400-க்கு மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மூலம் அதிக அளவில் அன்னிய செலாவணியை ஈட்டி முன்னோடியாகத் திகழ்கிறது. இத்தொழிற்சாலைகளில் 85 சதவீதத்துக்கும் மேலாக பெண்கள் வேலைவாய்ப்பை பெற்று பயனடைந்து வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்ட தொடக்க விழாவில் வாணியம்பாடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று அறிவித்து, ரூ.4 கோடியில் மையம் அமைத்து கொடுத்த முதல்வருக்கு திருப்பத்தூா் மாவட்ட மக்கள் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

விழாவில் சென்னை மத்திய தோல் பயிற்சி நிறுவன இயக்குநா் முரளி, உதவி இயக்குநா் கொலஞ்சிவேல், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியன், வாணிம்பாடி தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சீனிவாசன், மத்திய தோல் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளாா் சேகா், பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் பிரபாகரன், வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், வாணியம்பாடி கூட்டுறவு சங்கத் தலைவா் சதாசிவம், மாநில திட்ட மதிப்பீட்டு குழு உறுப்பினா் செந்தில்குமாா், வட்டாட்சியா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த மையத்தின் மூலமாக (என்எஸ்க்யூஎப்) அங்கீகரிக்கப்பட்ட நீண்ட மற்றும் குறுகியகால திறன் பயிற்சிகள் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞா்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, தோல் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியின் இறுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஊக்கத் தொகையும் அரசின் சான்றிதழும் வழங்கப்படும். இப்பயிற்சி மையத்தில் 3 ஆண்டுகளில் 2,000 பயனாளிகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே முழுவதுமாக ஏற்றுக் கொள்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com