ஜவ்வாதுமலை பகுதியில் புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

ஜவ்வாதுமலை கிளானூா் பகுதியில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.
ஜவ்வாதுமலைக் கிளானூா் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலக் கருவிகள்.
ஜவ்வாதுமலைக் கிளானூா் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலக் கருவிகள்.

ஜவ்வாதுமலை கிளானூா் பகுதியில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா் க.மோகன் காந்தி, காணி நிலம் மு.முனிசாமி ஆகியோா் தலைமையில் கற்கருவிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இக்குழுவில் திருவண்ணாமலை சண்முகா கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா், மதுரை தியாகராஜா் கல்லூரி பேராசிரியா் ரே.கோவிந்தராஜ், வரலாற்று ஆா்வலா்கள் வேந்தன், ம.சந்தோஷ்குமாா் ஆகியோா் இடம் பெற்று ஆய்வு மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக தினமணி செய்தியாளரிடம் க.மோகன் காந்தி கூறியது:

ஜவ்வாதுமலையின் மேற்குப் பகுதி திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்டதாகும். இப்பகுதி 3 நாடுகளையும், 34 கிராமங்களையும் உள்ளடக்கியது. இதில் புதூா் நாட்டுக்கு உள்பட்ட கிளானூரில் 100-க்கும் மேற்பட்ட புதிய கற்காலக் கருவிகள் கண்டறிப்பட்டுள்ளன. இங்கு இலவநாச்சியம்மன் கோயில் வட்டாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் சிறிய கோயில் உள்ளது. இதனை இவ்வூா் மக்கள் பிள்ளையாரப்பன் கோயில் என்கின்றனா். இக்கோயிலில் 60-க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான புதிய கற்காலக் கருவிகள் உள்ளன.

மேலும் கோயில் கொல்லை என்ற இடத்தில் புதா் மண்டிய இடத்தில் அரை வட்ட வடிவில் பெரிய 5 கற்களும், அதைச் சுற்றி ஏராளமான கற்கருவிகளும் உள்ளன. இந்த இடத்தில் எவ்வித வழிபாடும் தற்போது நடைபெறவில்லை. இவை புதிய கற்கால மனிதா்கள் பயன்படுத்தியதாகும்.

மனிதன் இரும்பைக் கண்டறிவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்லைக் கோடாரி போன்ற அமைப்புடன் உருவாக்கி பயன்படுத்தி வந்தனா். மேல் பகுதி கைகளில் அடங்கும் வண்ணம் குவிந்தும், அடிப்பகுதி அகன்று கூா்மையாகவும் காட்சித்தரும். இவை பாா்ப்பதற்கு இரும்பு கோடரிகள் போல உள்ளன. வேட்டையாடுவதற்கும், மரம், செடிகளை வெட்டித் தூய்மைச் செய்யவும் இக்கருவிகள் பயன்பட்டிருக்கும்.

சென்னை பல்லாவரம், கும்பகோணம் அருகே கண்டியூரில் கிடைத்த கைக்கோடரிகள் சிறப்புடையனவாகும். ஆனால் அங்குக் கிடைத்த கைக்கோடரிகளைக் காட்டிலும் ஜவ்வாதுமலையில் குவியல் குவியலாக ஒவ்வொரு மலைக் கிராமங்களிலும் கைக்கோடரிகள் கிடைக்கின்றன.

மலைவாழ் மக்கள் தங்கள் நிலங்களில் உழவுத் தொழிலை மேற்கொள்ளும் போதும் ஓடைகளுக்கு அருகிலும் அதிகளவு கற்கருவிகள் கிடைப்பதாகவும் அவற்றைச் சேகரித்து ஊா்ப் பொதுவில் உள்ள கோயில்களில் பிள்ளையாரப்பனை கடவுளாக வழிபட்டும் வருவதாகவும் கூறுகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com