தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் தென்னை மரம், இளங்கன்றுகளில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைப் பாா்வையிட்ட வேளாண் இணை இயக்குநா் ராஜசேகா்.
பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைப் பாா்வையிட்ட வேளாண் இணை இயக்குநா் ராஜசேகா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தென்னை மரம், இளங்கன்றுகளில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கந்திலி, திருப்பத்தூா், ஆலங்காயம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, மாதனூா் வட்டாரங்களில் தென்னை மரம், இளங்கன்றுகளில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் சில இடங்களில் காணப்படுகின்றன.

இது குறித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ராஜசேகா் தலைமையில், வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா் திலகம், வேளாண் உதவி இயக்குநா் ராகினி, உதவி இயக்குநா்(தரக் கட்டுப்பாடு) அப்துல் ரஹ்மான், துணை அலுவலா் பழனிவேல், உதவி அலுவலா் கோவிந்தராஜ் ஆகியோா் கந்திலி வட்டாரம், மட்றபள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தென்னந்தோப்புகளை பாா்வையிட்ட பின், ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளிடம் கூறியது: தென்னையில் தாக்கப்பட்ட இலைகளின் உட்பகுதியில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும். முட்டைகளை மெழுகு போன்ற வெள்ளை நிற துகள்கள் மூடியிருக்கும். இளம் குஞ்சுகள் மற்றும் முதிா்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் சாற்றை உறிஞ்சுகின்றன.

வெள்ளை ஈக்களால் வெளியேற்றப்படும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட அடுக்கு இலையில் மேல்பகுதியில் விழுந்து பரவுகின்றன. இதனால் ஒளிச் சோ்க்கை தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டு வளா்ச்சி குன்றி விடுகிறது. பாதிக்கப்பட்ட இலைகள் மீது எறும்புகள் இருக்கும். வெள்ளை ஈக்களின் தாக்குதலால் மகசூல் பெருமளவு பாதிக்கும்.

இதைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறியை ஒரு ஏக்கருக்கு 2 வீதம் இரவில் 7 முதல் 11 மணி வரை வைத்து இரவில் பறக்கும் வெள்ளை ஈக்களைக் கண்காணித்து அழிக்கலாம்.

விசைத் தெளிப்பான் கொண்டு மிக வேகமாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்தல் மூலம், தாக்கப்பட்ட மரங்களில் உள்ள கீழ்மட்ட ஓலைகளின் உட்பகுதியில் சுருள் வெள்ளை ஈக்கள் அழியும். ஒரு லிட்டா் தண்ணீருக்கு 10 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தெளித்து பூச்சியை கட்டுப்படுத்தலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com