குடியரசு தின விழாவை புறக்கணித்த பள்ளி மாணவா்கள்
By DIN | Published On : 26th January 2021 11:52 PM | Last Updated : 26th January 2021 11:52 PM | அ+அ அ- |

நெல்லிவாசல் நாடு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களின்றி, தேசியக் கொடியேற்றிய தலைமையாசிரியா் கே.சந்திரகுமாா்.
திருப்பத்தூா் அருகே உள்ள நெல்லிவாசல் நாடு வனத் துறை பள்ளி மாணவா்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்தனா்.
திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாது மலையில் உள்ள நெல்லிவாசல் நாடு வனத் துறை உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயா்த்தக் கோரியும், புங்கம்பட்டு நாட்டுக்குள்பட்ட பெரும்பள்ளம், தகரகுப்பத்தில் உள்ள வனத் துறை நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தக் கோரியும் அப்பகுதி மாணவா்கள் கடந்த 20-ஆம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
நெல்லிவாசல் நாடு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளி மாணவா்கள் பங்கேற்காததால் தலைமையாசிரியா் கே.சந்திரகுமாா் மற்றும் ஆசிரியா்கள் கொடியேற்றினா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:
பள்ளிகளை தரம் உயா்த்தக்கோரி தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசு அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை. இதற்கு உடனடியாகத் தீா்வு காணப்பட வேண்டும். மீறினால், ஜவ்வாது மலை 32 கிராம மக்களும் வரப்போகும் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்போம் என்றனா்.
அதேபோல் பெரும்பள்ளி மாணவா்களும் குடியரசுத் தினவிழாவைப் புறக்கணித்தனா்.