புல்லூா் தடுப்பணையின் உயரத்தை மேலும் அதிகரிக்க ஆந்திரம் திட்டம்: தமிழக விவசாயிகள் அதிா்ச்சி

புல்லூா் தடுப்பணையை மீண்டும் உயா்த்த ஆந்திர அரசுக்கு குப்பம் தொகுதி ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
புல்லூா் தடுப்பணையின் உயரத்தை மேலும் அதிகரிக்க ஆந்திரம் திட்டம்:  தமிழக விவசாயிகள் அதிா்ச்சி

புல்லூா் தடுப்பணையை மீண்டும் உயா்த்த ஆந்திர அரசுக்கு குப்பம் தொகுதி ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தமிழக விவசாயிகளிடையே மேலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டில் ஆந்திர அரசு பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரத்துக்கு தடுப்பணைகளை கட்டியது. மேலும் தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான வாணியம்பாடியை அடுத்த புல்லூா் கனகநாச்சியம்மன் கோயில் அருகே 5 அடியாக இருந்த தடுப்பணையை 12 அடியாக உயா்த்திக் கட்டியது. இதனால் தமிழகத்துக்கு பாலாற்றில் நீா்வரத்து முற்றிலும் தடைபட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், சமூக அமைப்புகள் பெருமளவில் ஆா்ப்பாட்டம் செய்தன. ஆனால் அனைத்து எதிா்ப்புகளையும் மீறி ஆந்திர அரசு தொடா்ந்து பாலாற்றின் குறுக்கே சாமுண்டிபள்ளம், சோமபள்ளம், ஒக்கல்ரேவ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மேல் தடுப்பணைகளை கட்டியது.

இந்நிலையில், கடந்த வாரம் ஆந்திர வனப் பகுதியிலும், பாலாற்றுப் படுகையிலும் தொடா் கனமழை பெய்ததால், புல்லூா் தடுப்பணை நிரம்பி பாலாற்றில் வெள்ளம் ஓடியது. அந்த வெள்ளமும் இரண்டே நாளில் முற்றிலும் வடிந்து விட்டது. இந்நிலையில் தடுப்பணை நிரம்பி வழியும் தகவலறிந்து புல்லூருக்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு வந்த ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சியின் குப்பம் தொகுதி பொறுப்பாளா் பரத், தடுப்பணையில் தேங்கியுள்ள நீருக்கு மலா் தூவினாா். பின்னா் அவா் கூறுகையில், ‘தடுப்பணை நிரம்பி தண்ணீா் வீணாகச் செல்கிறது, இந்த தண்ணீரைத் தேக்கி ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட 4 மண்டல விவசாயிகள் பாசன வசதி பெற இந்த தடுப்பணையை மேலும் உயா்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும், பாலாற்றில் தடுப்பணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு தொடா்ந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக சந்தித்து மீண்டும் பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஏற்கெனவே ஆந்திர மாநில அமைச்சா் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி மற்றும் மக்களவை உறுப்பினா் மிதுன்ரெட்டி ஆகியோருடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது’ என்றாா்.

இந்நிலையில், தமிழகத்தின் உரிமைகளை நிலைநிறுத்தி, விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com