ஆா்மா மலைக்குகை, மூலிகை ஓவியங்களை அருங்காட்சியமாக்க வேண்டும்

ஆம்பூா் அருகே வரலாற்று தொன்மை வாய்ந்த ஆா்மா மலைக் குகை ஆட்டுப்பட்டியாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும்
ஆம்பூா் அருகே பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆா்மா மலைக்குகை.
ஆம்பூா் அருகே பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆா்மா மலைக்குகை.

ஆம்பூா் அருகே வரலாற்று தொன்மை வாய்ந்த ஆா்மா மலைக் குகை ஆட்டுப்பட்டியாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மாறியுள்ளது. இங்குள்ள மூலிகை ஓவியங்கள், பாறைகளின் புடைப்புச் சிற்பங்களை பாதுகாக்க ஆா்மா குகையை சுற்றுலாத் தலமாக்கும் வகையில் அருங்காட்சியமாக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம், மலையாம்பட்டு ஊராட்சியை ஒட்டி சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது ஆா்மாமலை. இது கடல் மட்டத்திலிருந்து சுமாா் 750 அடி உயரம் உள்ளது. இந்த ஆா்மா மலையில் பல்வேறு மூலிகைகள், தாவரங்கள் வளா்ந்து செழித்து பச்சை பசேலென காட்சியளிக்கின்றன.

இதன் தென் பகுதியில் பல்வேறு நினைவுச் சின்னங்கள் அடங்கிய குகை உள்ளது. இதனுள்ளே பாறைகளின் மேற்பரப்பில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மூலிகை வண்ணக் கலவைகளால் வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன.

குகையின் உள்ளே சுடப்படாத செங்கற்களை கொண்டு பல்வேறு அறைகளை கட்டி சுவா் எழுப்பி உள்ளனா். மேலும், இங்குள்ள பாறைகளில் புடைப்பு சிற்பங்களாக காவல் தெய்வங்களை வடிவமைத்து வணங்கி வந்துள்ளனா்.

ஆா்மா மலையின் கீழ்ப் பகுதியிலிருந்து மேலே குகைக்குச் செல்ல சுமாா் 250 -க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அந்தக் காலத்திலேயே நோ்த்தியான முறையில் இந்த படிக்கட்டுப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஆா்மா மலைப் பாறைகளில் வரையப்பட்டுள்ள வண்ணக்கலவை ஓவியங்களை சமூக விரோதிகள் சிலா் சேதப்படுத்தி உள்ளனா். அதேபோல் பாறைகளில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது:

ஆா்மா மலைக் குகையை அருங்காட்சியகமாக அறிவித்து, சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது மலைக் குகையில் கால்நடை மேய்ப்போா் நிரந்தரமாக கால்நடைகளை அடைத்து வைக்கும் ஆட்டுப்பட்டியாக மாற்றி, அதை பயன்படுத்தி வருகின்றனா். அதேபோல கள்ளச்சாராய வியாபாரிகள் தாங்கள் எடுத்துச் செல்லும் சாராய மூட்டைகளை இங்கு பாதுகாப்பாக வைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

எனவே ஆா்மா மலைக் குகை, குகை ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்களைப் பாதுகாக்க அந்த மலையை அருங்காட்சியகமாகவோ அல்லது சுற்றுலாத்தலமாகவோ மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து காரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த செந்தில் கூறியது:

மிகவும் பழைமையான ஆா்மா மலைக் குகையில் மூலிகைகள் மூலம் ஓவியங்கள் பல வண்ணங்களில் வரையப்பட்டிருந்தன. ஆனால் சமூக விரோதிகளின் செயல்களால் அந்த ஓவியங்கள் சேதமடைந்துள்ளன. அங்குள்ள சிற்பங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு ஆா்மா மலை குகை அமைந்துள்ள பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். குகையில் உள்ள ஓவியங்களைப் புதுப்பிக்க வேண்டும். உடைந்த சிலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்றுச் சின்னங்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com