பயன்பாட்டுக்கு வராத பேரூராட்சி கடைகள்!
By DIN | Published On : 19th July 2021 08:01 AM | Last Updated : 19th July 2021 08:01 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும், 6 கடைகள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.
நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில், பேரூராட்சி அலுவலகம் அருகே 2017-18 ஆம் ஆண்டு பொது நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 6 கடைகள் கட்டப்பட்டன.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் கடைகள் ஏலம் விடப்பட்டன. அப்போது, அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் கடைகள் ஏலம் விடப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டன.
இதன்பின்னா், கடந்த 2 ஆண்டுகளாக கடைகள் ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் புதியதாகக் கட்டப்பட்டுள்ள கடையின் மேல்தளம் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் புகலிடமாக இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் பொது ஏலம் மூலம் கடைகளை வாடகைக்கு விட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.