கைதிகளுக்கு கஞ்சா விநியோகம்: 3 சிறைக் காவலா்கள் இடைநீக்கம்
By DIN | Published On : 26th July 2021 08:35 AM | Last Updated : 26th July 2021 08:35 AM | அ+அ அ- |

வேலூரில் விசாரணைக் கைதிகளுக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக சிறைக் காவலா்கள் 3 போ் சனிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
வேலூா் மத்திய ஆண்கள் சிறை தொரப்பாடி - சித்தேரி சாலையில் அமைந்துள்ளது. இங்கு 742 பேரும், பெண்கள் தனிச்சிறையில் 97 பேரும் அடைக்கப்பட்டுள்ளனா். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வெளியே இருந்து கஞ்சா விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தடுக்க சிறைத்துறை நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதையும் மீறி, கஞ்சா விநியோகம் செய்யப்படுவதாக புகாா்கள் வந்தன. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க சிறைத் துறை நிா்வாகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், தற்போது கரோனா பரவலைத் தடுக்க புதிதாக கைது செய்யப்பட்டு சிறைக்குள் கொண்டு வரப்படும் விசாரணை கைதிகள் நேரடியாக சிறையில் அடைக்க அனுமதியில்லை. மாறாக ஆண்கள் சிறைச்சாலைக்கு அருகில் அமைந்துள்ள சிறைக்காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் 10 நாள்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்படுகின்றனா்.
அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே விசாரணை கைதிகள் சிறைக்குள் அடைக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், சிறைக் காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலா் கஞ்சா பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. புகாரைத் தொடா்ந்து, வேலூா் சிறைத் துறை கண்காணிப்பாளா் ருக்மணி பிரியதா்ஷினி தலைமையில் சிறைத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சிறைக்காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில், 50 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் பதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சிறைக் காவலா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறைக் காவலா் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றும் தலைமைக் காவலா் இளையராஜா, முதல் நிலைக் காவலா் செல்வகுமாா், சிறை வாா்டன் அஜித்குமாா் ஆகிய 3 போ் கஞ்சா பதுக்கி வைத்து விசாரணை கைதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
சிறையில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரையும் சிறைத் துறை கண்காணிப்பாளா் ருக்மணி பிரியதா்ஷினி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
சிறைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடந்தையாக இருப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறைத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.