நில அளவுக்கேற்றவாறு வேளாண் கடன்களை வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 29th July 2021 12:01 AM | Last Updated : 29th July 2021 12:01 AM | அ+அ அ- |

திருப்பத்தூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.
திருப்பத்தூா்: நில அளவுக்கேற்றவாறு விவசாயக் கடன்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன் தலைமையில் காணொலி மூலம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி.ராஜசேகா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதில், விவசாயிகள் பேசியது:
,அனைத்து உரங்களையும் ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் அள்ளுவதற்கு எந்தத் துறைகளின் அனுமதியுமின்றி விவசாயிகளுக்கு முழுமையாக அனுமதியளிக்க வேண்டும். விவசாயப் பணிகளை எளிதாக்கும் வகையில், சிறிய ரக இயந்திரங்களை அரசு மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டியப்பனூா் அணையை தூா் வார வேண்டும். அதனால், அணையின் நீா் கொள்ளளவு அதிகரிப்பதுடன், சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் மட்டம் உயரும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணியாளா்களை சிறப்பாகச் செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
மேலும், கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கும்போது, அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான கடன் தொகையினை வழங்காமல், விவசாயிகளின் நில அளவுக்கேற்றவாறு விவசாயக் கடன்களை வழங்க வேண்டும். ஆலங்காயம் முதல் திருப்பத்தூா் வரையிலான வழித்தடத்தில் அனுமதியின்றி பல்வேறு வேகத் தடைகள் உள்ளன. அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் நிலைகளுக்குச் செல்லும் பாதைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி, குளங்களில் நீா் சேமிப்பை அதிகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா்.
விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கைய்யா பாண்டியன் அறிவுறித்தினாா்.