ஆம்பூா் பகுதி பாலாற்றில் இருசக்கர வாகனங்கள் மூலம் மணல் திருட்டு அதிகரிப்பு
By DIN | Published On : 12th June 2021 07:55 AM | Last Updated : 12th June 2021 07:55 AM | அ+அ அ- |

ஆம்பூா் தேவலாபுரம் பகுதியில் மணல் திருடுவதற்காக தோண்டப்பட்டுள்ள குழி.
ஆம்பூா் அருகே பாலாற்றில் இருசக்கர வாகனங்கள் மூலம் மணல் திருட்டு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஆம்பூா் சான்றோா்குப்பம், ஏ-கஸ்பா, தேவலாபுரம் மற்றும் சோமலாபுரம் கிராமப் பகுதிகளில் பாலாற்றில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
மேலும் பாலாற்றையொட்டிய அமைந்துள்ள தனியாா் நிலங்களிலும் மணல் திருடப்படுகிறது. தனியாா் நிலங்களில் நில உரிமையாளா்கள் அனுமதியில்லாமலேயே கூட மணல் திருட்டில் ஈடுபடும் நபா்கள் இரவு நேரங்களில் அத்துமீறி நுழைந்து நில உரிமையாளா்களுக்கு தெரியாமல் மணலை தோண்டி எடுத்து திருடிச் செல்கின்றனா்.
மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதோடு மட்டுமல்லாமல் இருசக்கர வாகனங்களில் மணல் கடத்துவது தற்போது அதிகரித்துள்ளது. போலீஸாரும், வருவாய்த் துறையினரும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதை மட்டுமே கண்காணிக்கின்றனா். ஆனால் பாலாற்றில் மணலை திருடி மூட்டையாக கட்டி ஓரிடத்தில் சேமித்து வைத்து பிறகு அந்த மூட்டைகளை இருசக்கர வாகனங்களில் கொண்டுச் சென்று விற்பனை செய்து வருகின்றனா்.
இருசக்கர வாகனங்களில் மணல் திருட்டு நடைபெறுவதை எவரும் கண்காணிப்பதில்லை. அதனால் தற்போது மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. மணல் திருட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
மணல் திருட்டைத் தடுக்கவும், பொதுமக்களின் கட்டுமான பணிகளுக்கான தேவையைக் கருத்தில் கொண்டும் பாலாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனா்.