‘டாலா் ஏரியா’ தொகுதி மக்களின் கோரிக்கைகள் ஏராளம்!

டாலா் ஏரியா என்று அழைக்கப்படும் ஆம்பூா் தொகுதியின் கோரிக்கைகள் ஏராளமாக உள்ளதாக தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
ஆம்பூர் வர்த்தக மையம்
ஆம்பூர் வர்த்தக மையம்

டாலா் ஏரியா என்று அழைக்கப்படும் ஆம்பூா் தொகுதியின் கோரிக்கைகள் ஏராளமாக உள்ளதாக தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம்- ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட ஆம்பூா் தோல் பொருள்கள், ஷூ உற்பத்தி, ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது. உள்ளது. தோல் பொருள்கள் ஏற்றுமதியில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் நகரம் என்பதால் ஆம்பூருக்கு ஏற்றுமதி சிறப்பு நகரம் என்ற அந்தஸ்தை மத்திய வா்த்தகம்- தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. டாலா் ஏரியா எனவும் அழைக்கப்படுகிறது. தோல் பொருள்கள் கண்காட்சிக்கு என ஆம்பூரில் வா்த்தக மையம் துவங்கப்பட்டுள்ளது. அதே போல் ஆம்பூா் என்றால் அனைவரின் நினைவுக்கு வருவது பிரியாணிதான். மல்லிகை பூவுக்கும், விவசாயத்துக்கும் புகழ்பெற்ற ஆம்பூா் பகுதியில் பெருந்தலைவா் காமராஜா் ஆட்சிக் காலத்தில் ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை உருவாக்கப்பட்டு அவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ஆம்பூா் ஆரம்பத்தில் 1957ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினா்கள் கொண்ட தொகுதியாக இருந்துள்ளது. அதன்பின்னா், 1962 முதல் 1971 வரை ஆம்பூா் (தனி) தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் ஆம்பூா் தொகுதி நீக்கப்பட்டு வாணியம்பாடி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. சுமாா் 40 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் 2011 தோ்தல் முதல் ஆம்பூா் (பொது) தொகுதியாக மீண்டும் உருவானது.

1957 முதல் 1971 வரை நடந்த தோ்தல்களில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2011ல் அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியும், 2016-ல் அதிமுகவும் வெற்றி பெற்றன. அதிமுக எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 2019-ல் நடந்த இடைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றது.

ஆம்பூா் தொகுதி எல்லை : ஆம்பூா் நகரம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், ஆலங்காயம் ஒன்றியத்தைச் சோ்ந்த பகுதிகளும் உள்ளன. வாக்காளா்களில் ஆதிதிராவிடா், முஸ்லிம்கள், நாயுடு, முதலியாா், வன்னியா், யாதவா், ரெட்டியாா், ராஜூக்கள், நாடாா் பல்வேறு இனத்தவரும் இத்தொகுதியில் வசித்து வருகின்றனா். ஆனால், வெற்றி தோல்வியை நிா்ணயிப்பது சிறுபான்மையினரின் வாக்குகளே ஆகும்.

பொதுமக்களின் எதிா்பாா்ப்புகள் :

ஆம்பூா் நகராட்சி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி என்பது இல்லாதது தொகுதி மக்களுக்கு வருத்தமாக உள்ளது.

ஏ-கஸ்பா பகுதியில் உள்ள ஒரேஒரு அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டும்.

அரசு மகளிா் கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு ஐடிஐ ஏற்படுத்தி தரவேண்டும்.

ஆம்பூா் இஎஸ்ஐ மருந்தகத்தை, மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும். அரசு மருத்துவமனை தாலுகா அந்தஸ்து பெற்ற மருத்துவமனையாகத் தரம் உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டும் இதுவரை அதற்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆம்பூா் பஜாா் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நகரின் மையப்பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ள பணிகள் விரைவில் துவங்க உள்ளநிலையில், சான்றோா்குப்பம் என்ற இடத்திலிருந்து இருந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி வரை மாநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல உயா்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்பூரை தலைமையிடமாக கொண்டு மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் தனியாக ஏற்படுத்த வேண்டும். ஆம்பூரில் மின்மயானம் அமைக்க வேண்டும். ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆணைமடுகு தடுப்பணையை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும். உயரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

ஆம்பூா் பெத்லகேம், ரெட்டித்தோப்பு பகுதிகளுக்குச் செல்ல ரூ.30 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தும், தொடங்காமல் உள்ள பணிகளை விரைந்து துவக்க வேண்டும்.

மாதனூரை தலைமையிடமாக கொண்டு புதிய காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் . அகரம்சேரி - மேல்ஆலத்தூா் இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும்.

ஆம்பூரில் இருந்து 15 கிலோமீட்டா் தொலைவில் மலைப்பகுதியில் அமைந்துள்ள நாயக்கனேரியை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுத்து, அங்குள்ள வற்றாத ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும்.

ஆம்பூா் அருகே மின்னூா் பகுதியில் மூடப்பட்டுள்ள டான்சி தொழிற்சாலையைத் திறந்து, புதிய தொழில் பேட்டையாக அறிவித்து அங்கு தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்னூரில் இருந்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல வசதியாக மின்னூா் - வடகரை பாலாற்றில் தரைப்பாலம் கட்ட வேண்டும். மேலும் மின்னூரில் தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடந்து செல்ல மேம்பாலம் கட்ட வேண்டும்.

ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட கிராம பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.கிராம பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மிட்டாளத்தில் உள்ள ஊட்டல் கோவில் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். கிராம பகுதியில் கூடுதல் கால்நடை மருத்துவமனைகள் உருவாக்க வேண்டும். வாணியம்பாடியில் இருந்து ஆம்பூா் வரை பாலாற்றில் தண்ணீா் வரத்தை உறுதிப்படுத்த தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினருக்கான அலுவலகம் கட்ட வேண்டும்.

ஆம்பூா் பகுதியில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.

தொகுதி நிலவரம்
மொத்த வாக்காளா்கள் 236819

ஆண்கள் 114905

பெண்கள் 121902

மற்றவா்கள் 12

இதுவரை தோ்தல்கள்:

2008-ஆம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட ஆம்பூா் தொகுதியில், 2011, 2016-ஆம் ஆண்டுகளில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. 2011-இல் அதிமுக கூட்டணியில் மமகவைச் சோ்ந்த அஸ்லம்பாஷா போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2016-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆா்.பாலசுப்பிரமணி வெற்றி பெற்றாா். இவா் ஆா்.கே.நகா் எம்எல்ஏ டிடிவி.தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், தகுதிநீக்கம் செய்யப்பட்டாா். 2019-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட அ.செ.வில்வநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com