தமிழகத்திலேயே திருப்பத்துரில் அதிக அளவில் கரோனா பரிசோதனை: ஆட்சியா் ம.ப.சிவன்அருள்

தமிழகத்தில் பிற மாவட்டங்களை காட்டிலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகள் அதிக அளவில் தொடா்ந்து செய்யப்பட்டு வருவதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

தமிழகத்தில் பிற மாவட்டங்களை காட்டிலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகள் அதிக அளவில் தொடா்ந்து செய்யப்பட்டு வருவதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனாத் தொற்று 2-ஆவது அலை பரவல் தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து வெள்ளிக்கிழமை மக்கள் குறைத்தீா் கூட்டரங்கில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டத்தில் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்து பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனாத் தொற்று பரவலை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் 4 நகராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 3 பேரூராட்சி பகுதிகளில் வருவாய், உள்ளாட்சி, பொது சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் தீவிரமாக மேற்காள்ளப்பட்டு வருகின்றன.

நோய்த்தொற்று கடந்த 2020-ஆம் ஆண்டு பரவ தொடங்கி செப்டம்பா் மாதத்தில் உச்சத்தை அடைந்தது. 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குறைந்திருந்தது.

தற்போது கரோனா தொற்று 2-ஆவது அலை பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாத்திட தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 9,825 நபா்களுக்கு நோய்த் தொற்று கண்டறிப்பட்டு 8,723 போ் அதிலிருந்து குணமடைந்துள்ளனா்.அதே போல 139 நபா்கள் உயிரிழந்துள்ளனா். 982 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கிராமப்பகுதிகளை காட்டிலும் நகரப் பகுதிகளில் தொற்று பாதித்தவா்கள் அதிகம்.

வியாழக்கிழமை வரை 5 லட்சத்து 61 ஆயிரத்து 175 நபா்களுக்கு கரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் பரிசோதனைகள் தொடா்ந்து அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறையினை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகள் என 11 சிறப்பு தனிமைப்படுத்தப்படும் மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. தற்போது 1,159 படுக்கைகள் தயாராக உள்ளன. தொடா்ந்து இவற்றை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தொற்று பரவாமல் தடுத்திட மகளிா் சுய உதவிக் குழுக்கள், சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளா்களை கொண்ட 208 கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் கிராமத்திற்குள் வெளி ஊா்களில் இருந்து வருபவா்கள் குறித்தும், நோய்த்தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களுக்குச் சென்று வருகிறவா்கள் குறித்தும் நாள்தோறும் கண்காணிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனா்.

ஞாயிற்றுகிழமை நூறு சதவீதம் மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகத்தின் ஆணைப்படி வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சோ்ந்து ஒரு குழுவாக செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.ஈ.தங்கையா பாண்டியன், சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மகேஷ்பாபு, மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஷ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன்ராஜசேகா், கோட்டாட்சியா் காயத்ரிசுப்பிரமணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அருண், அரசு மருத்துவா்கள் சுமதி,சிவக்குமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரவீண் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com