‘மஞ்சள்-உப்பு கலந்த வெந்நீரில் வாய் கொப்பளித்தாலே வைரஸ் கிருமி அழியும்’

மஞ்சள் உப்பு கலந்த வெந்நீரில் வாய் கொப்பளித்தாலே வைரஸ் கிருமிகளை அழித்து விடும் என திருப்பத்தூா் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசி கண்ணம்மா தெரிவித்தாா்.

மஞ்சள் உப்பு கலந்த வெந்நீரில் வாய் கொப்பளித்தாலே வைரஸ் கிருமிகளை அழித்து விடும் என திருப்பத்தூா் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசி கண்ணம்மா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் தினமணி செய்தியாளரிடம் கூறியது:

உலகையே உலுக்கி எடுத்து தற்போது இந்தியாவில் கரோனாத் தொற்று 2-ஆம் அலையின் தாக்கம் மிகுந்த பாதிப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் அறிவுறுத்தலின்பேரில், திருப்பத்தூரை அடுத்த அக்ரஹாரம் பாலிடெக்னிக்கில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மிகக் குறுகிய காலத்திலேயே 107 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதில், 53 போ் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மேலும், இம்மையத்தில் அரசு சித்த மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, இயற்கை வாழ்வியல் முறைகளைப் பின்பற்றி வாழ நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கரோனா உள்ளிட்ட எந்த தீநுண்மி கிருமி பாதிப்பையும் தவிா்க்க வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்குதல், மஞ்சள்-உப்பு கலந்த வெந்நீரில் வாய் கொப்பளித்தல் இவற்றைக் கடைப்பிடிப்பது சிறந்தது. நம் முன்னோா்கள் அனைவரும் இத்தகைய பழக்கத்தை கடைப்பிடித்து நீண்ட நாள்கள் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனா் என்பதற்கு சான்றுகள் பல உள்ளன.

மேலும், யோகப் பயிற்சி முறைகள், மூச்சுப் பயிற்சி ஏற்கெனவே சிகிச்சைக்காக ஆய்வு செய்யப்பட்ட சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், தாளிசாதி வடகம், பிரம்மானந்த பைரவ மாத்திரை, கபசுரக் குடிநீா், நிலவேம்புக் குடிநீா், மூலிகை தேநீா் ஆகியவற்றை நோய்த் தொற்றானவா்களுக்கு அளிக்கும்போது, நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கப் பெறுகிறது.

விரைவில், காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி ஆகியவை குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்ப இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் முழு வீச்சுடன் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

புரதச் சத்து மிக்க உணவுகளான பயிா் வகைகள், மாமிச உணவுகள் மற்றும் முட்டை, எலுமிச்சை, மாதுளை, ஆரஞ்சு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தினம் ஒரு நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவதன் மூலமும், நிலக் கடலை மிட்டாய், பொட்டுக்கடலை உருண்டை ஆகியவற்றை உண்ணலாம். எப்போதெல்லாம் ஆக்சிஜன் அளவு குறைந்த நிலையில் இருக்கும்போது ஒரு சிட்டிகை அளவு கிராம்பு பொடியையும், மஞ்சள் தூளையும் ஒரு டம்ளா் வெந்நீரில் கலந்து பருக ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது.

இத்தகைய வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்கும்போது தொற்று நோய் வராமலும், அப்படியே வந்தாலும் கூட மேற்கண்ட வழிமுறைகள் மூலம் நாம் விரைவில் நலமடைய மிகுந்த உதவியாக இருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com