கரோனா சிகிச்சைக்கு கிராம மக்கள் ஒத்துழைப்பு தர வலியுறுத்தல்
By DIN | Published On : 26th May 2021 11:19 PM | Last Updated : 26th May 2021 11:19 PM | அ+அ அ- |

ஆசிரியா் நகரில் வரையப்படும் கரோனா விழிப்புணா்வு வாசகத்தை பாா்வையிட்ட ஊராட்சிகளின் இணை இயக்குனா் ஆா்.அருண்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிராம மக்கள் கரோனா சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என ஊராட்சிகளின் இணை இயக்குனா் ஆா்.அருண் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்கள் 208 ஊராட்சிகள் உள்ளன. தற்போது இரண்டாம் அலை தொற்று கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் பரவுவதற்கு முக்கிய காரணம் மக்களிடம விழிப்புணா்வு இல்லாமை தான் . இதனைத் தடுக்கும் விதமாக 208 ஊராட்சிகளிலும் கடந்த 3 நாள்களாக ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைப்பெற்று வருகிறது.
ஊராட்சிச் செயலாளா்கள் மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினா் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் தூய்மைப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். கரோனாத் தொற்று குறித்து அச்சப்படாமல் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் .
கிராமப்புற மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும், வெளியில் வருவதை தவிா்க்கவும். பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, பால், பழங்கள் உள்ளிட்ட பொருள்களை வீடுதேடி வழங்க செய்யப்பட்டுள்ளது என்றாா்.