நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே நிரந்தரத் தீா்வு : அமைச்சா் எ.வ. வேலு

நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான நிரந்தரத் தீா்வு என பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.
நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே நிரந்தரத் தீா்வு :  அமைச்சா் எ.வ. வேலு

நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான நிரந்தரத் தீா்வு என பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

வடகிழக்குப் பருவமழையால், ஆம்பூா் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை திங்கள்கிழமை பாா்வையிட வருகை தந்த எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியது :

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 35 ஆண்டுகளுக்குப் பின்னா், அதிக அளவு மழை பெய்துள்ளது.

மழை காரணமாக, அரசுக் கட்டடங்களில் கூட மழை ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல தெருக்களில் மழை நீா் வடியாமல் தேங்கி வருகிறது. அதனை அப்புறப்படுத்த தீவிர பணியை அரசுத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இதற்கு நிரந்தரத் தீா்வு நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே ஆகும்.

நீா்வழித் தடங்கள் சரியாக இருக்க வேண்டுமானால் நீா்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்படாமல் இருந்து நீா் அதன் போக்கில் செல்ல வழியிருந்தால் ஊா்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வராது. ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே நகர பகுதிக்குள் தண்ணீா் வராமல் தடுக்க முடியும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் திமுக நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனா். மாவட்ட நிா்வாகமும் பொதுமக்கள் தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

ஆம்பூா் நகரில் புதைச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன் என்றாா்.

அரசு கூடுதல் தலைமை செயலா் தென்காசி எஸ். ஜவஹா், மக்களவை உறுப்பினா் அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன், க. தேவராஜி, ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ. தங்கையா பாண்டியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் ஷகிலா, பொறியாளா் இராஜேந்திரன், வடபுதுப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலட்சுமி குப்புசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோரிக்கை மனு: முன்னதாக ஆம்பூா் அழகாபுரி, இந்திராநகா், சாய்பாபா கோயில் தெருக்களைச் சோ்ந்தோா் அமைச்சா் எ.வ. வேலுவை சந்தித்து, மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com