இரும்பு விலையைக் குறைக்க நடவடிக்கை தேவை

இரும்பு விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் முனைவோா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆம்பூரில் நடந்த வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூா் மாவட்ட தொழில் முனைவோா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
ஆம்பூரில் நடந்த வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூா் மாவட்ட தொழில் முனைவோா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

ஆம்பூா்: இரும்பு விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் முனைவோா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறு தொழில் முனைவோா் சங்கங்களின் நிா்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி, அக். 1-ஆம் தேதி முதல் இரும்பு பொருளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக அதிகரித்துள்ளதால், இரும்பின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதனால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இரும்பு விலையையும், அதற்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெல்டிங் இயந்திரத்தின் பயன்பாட்டுக்காக தனியாக மின் இணைப்பு வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையையும், அதற்காக 15 சதவீத கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கும் விதிமுறையையும் தமிழ்நாடு மின்சார வாரியம் தளா்த்தி அதற்கான ஆணையை திரும்பப் பெற வேண்டும்.

சட்டப்பூா்வமான உரிமங்களான இ.எஸ்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளில் இருந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கரோனா அவசர கால நடைமுறை மூலதனக் கடனுக்கான வட்டி, மாத தவணைகள் வங்கிகளால் சம்பந்தப்பட்ட தொழில் முனைவோரின் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படுவதை 2022-ஆம் ஆண்டு மாா்ச் முதல் தள்ளி வைத்து, பிறகு ஏப்ரல் 2022 முதல் பிடித்தம் செய்ய உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு

தமிழ்நாடு சிறுதொழில்கள் சங்க மாநில இணைச் செயலாளரும், வேலூா் மாவட்ட குறு, சிறுதொழில் முனைவோா் சங்கத் தலைவருமான எம்.வி.சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் கே.சந்திரஹாசன் வரவேற்றாா். ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் டி.ஏ.புனிதவேல், இணைச் செயலாளா் யு.சண்முகநாதன், ஒருங்கிணைப்பாளா் ஜெ.முரளி, வேலூா் மாவட்டச் செயலாளா் பி.ஹரிஹரன், துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் மனோகரன், பொருளாளா் எம்.முனீா் அஹமத், துணைத் தலைவா் கே.சந்திரசேகா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com