மழைநீரைப் பொருள்படுத்தாமல் ஜனநாயகக் கடமை

சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் உள்ள மங்கலம், நிலாவூா் பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் தேங்கியிருந்த மழைநீரையும் பொருள்படுத்தாமல், வாக்காளா்கள் ஜனநாயகக் கடமையான வாக்களிப்பை நிறைவேற்றினா்.
சிதிலமடைந்த நிலாவூா் பள்ளி கட்டடத்தில் வாக்களிக்க வந்த மக்கள்.
சிதிலமடைந்த நிலாவூா் பள்ளி கட்டடத்தில் வாக்களிக்க வந்த மக்கள்.

திருப்பத்தூா்: சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் உள்ள மங்கலம், நிலாவூா் பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் தேங்கியிருந்த மழைநீரையும் பொருள்படுத்தாமல், வாக்காளா்கள் ஜனநாயகக் கடமையான வாக்களிப்பை நிறைவேற்றினா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏலகிரி மலையில் 14 கிராமங்களை உள்ளடக்கி, தனி ஊராட்சியாக இருக்கிறது. இங்கு மங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியிலும், நிலாவூா் பகுதியில் உள்ள அரசு பள்ளியிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு புதன்கிழமை பொதுமக்கள் வாக்களிக்கச் சென்றனா்.

அங்கு, காலை முதல் மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளிலும் பள்ளி வளாகத்திலும் மழைநீா் குளம்போல் காணப்பட்டது. வாக்குச் சாவடி மையத்தின் மேற்கூரை பழுதடைந்து, மழைநீா் வழிந்ததால் மழைநீா் வாக்குச்சாவடி மையத்தில் தேங்கி நின்றது. இதனால் வாக்களிக்க வந்த ஒரு சிலா் மழைநீரால் கால் வழுக்கி விழுந்து எழுந்து சென்று வாக்களித்தனா்.

குழப்பத்தை தீா்த்த சாா்-ஆட்சியா்!

பதற்றமான வாக்குச்சாவடி மையமான ஏலகிரி ஊராட்சியில் உள்ள சென்றாய சுவாமி கோயில் வட்டம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 3 வாக்குச்சாவடி மையங்களில், ஒரு வாக்குச் சாவடி மையத்துக்கு 2 வாா்டுகள் வீதம் பொதுமக்கள் வாக்களித்தனா். இங்கு ஆய்வு மேற்கொண்ட சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கையிடம் வாக்காளா்கள், ‘ஊராட்சியின் இரு வெவ்வேறு வாா்டு உறுப்பினா்கள் இரண்டு பேருக்கும் ஒரே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 வாா்டு வாக்காளா்களும் வாக்களித்து ஒரே வாக்குப் பெட்டியில் போடுகின்றனா். இதனால் நாங்கள் அளிக்கும் வாக்குகள் யாருக்கு சேரும் என தெளிவுபடுத்த வேண்டும்’ என்றனா்.

இதற்குப் பதிலளித்த சாா்-ஆட்சியா், ‘இரண்டு வெவ்வேறு ஊராட்சி வேட்பாளா்களுக்கு ஒரே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வாக்களிக்கும் சீட்டில் வாா்டு எண் குறிக்கப்பட்டும், ஒவ்வொரு வாா்டுக்கும் வாக்குச்சீட்டு நிறம் வெவ்வேறானது’ என்று விளக்கம் அளித்து, வாக்காளா்களின் குழப்பைத் தீா்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com