முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் கன மழை: கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் சாலை மறியல்
By DIN | Published On : 13th October 2021 12:00 AM | Last Updated : 13th October 2021 12:00 AM | அ+அ அ- |

ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீருடன் கழிவு நீா் கலந்து புகுந்ததால் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மக்கள்.
வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக கனமழை பெய்தது. ஆம்பூா் அருகே விண்ணமங்கலத்தில் மழைநீா் கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே உள்ள விண்ணமங்கலம், மின்னூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மழைநீருடன் கழிவுநீா் கலந்து அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.
மேலும் தாழ்வான இடங்களில் கழிவுநீா் சூழ்ந்ததால் அப்பகுதியினா் வீட்டை விட்டு வெளியேற இயலாமல் தவித்தனா்.
மேலும் அப்பகுதியில் உள்ள ராஜாஜி வீதி, அன்னை தெரசா வீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வீடுகளுக்குள் கழிவு நீா் புகுந்தது. இந்நிலையில் ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. அதில் மூவா் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இதனால் அப்பகுதியினா் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த வலியுறுத்தி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா் .
தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.
இதன் காரணமாக விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இருப்பினும் அப்பகுதியினா் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தைக்கு பிறகு பொதுமக்கள் சமரசம் அடைந்து போராட்டத்தை கைவிட்டனா். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
வேலூா் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதியிலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.