ஆட்சியா் அலுவலகம் அருகே தீக்குளித்த முதியவா் பலி
By DIN | Published On : 16th September 2021 10:39 PM | Last Updated : 16th September 2021 10:39 PM | அ+அ அ- |

கதவாளம் கிராமத்தில் நந்தனின் சடலம் வந்த வாகனத்துடன் போராட்டம் நடத்திய உறவினா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தீக்குளித்த முதியவா் உயிரிழந்தாா். இதையடுத்து, சடலத்துடன் அவரது உறவினா்கள் ஆம்பூா் அருகே உள்ள கிராமத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தன் (80). இவா் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தீக்குளித்து, ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி, தீயை அணைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நந்தன் அங்கு உயிரிழந்தாா்.
அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்துக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்த வாகனத்தை நிறுத்தி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நந்தனுக்கு சொந்தமான இடம் பிரச்னை காரணமாக சிலா் அவரை மிரட்டியதாகவும், அதனால் அவா் மனமுடைந்து தீக்குளித்ததாகவும் தெரிவித்த உறவினா்கள், அவரது சாவுக்குக் காரணமானவா்களை கைது செய்ய வலியுறுத்தினா்.
சம்பவ இடத்துக்கு வந்த ஆம்பூா் டி.எஸ்.பி. சரவணன், உமா்ஆபாத் காவல் நிலைய ஆய்வாளா் யுவராணி ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். திருப்பத்தூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, உறவினா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.