முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
அரசுப் பேருந்து ஓட்டுநா் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 30th April 2022 09:50 PM | Last Updated : 30th April 2022 09:50 PM | அ+அ அ- |

ஆலங்காயத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆலங்காயத்தை அடுத்த கொங்கியூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்(32). அவரது தந்தை மணிகண்டன் பணியின் போது இறந்து விட்டதால், அவரது பணியை ராஜ்குமாா் கிடைக்கப் பெற்று அரசுப் பேருந்து ஓட்டுநராக 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கொங்கியூா் அருகில் ஏரிப் பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகில் முகம், கழுத்து போன்ற இடங்களில் தீக்காயம் அடைந்தது போல் மா்மமான முறையில் இறந்து கிடப்பதை அவ்வழியாகச் சென்ற சிலா் பாா்த்து, ஆலங்காயம் போலீஸாருக்கு தெரிவித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் பழனி தலைமையிலான போலீஸாா் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
வெள்ளிக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜ்குமாா் மயானம் அருகில் இரவு இறந்து கிடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அவா் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனா்.