தீவிரவாத அமைப்புடன் தொடா்பு: ஆம்பூா் கல்லூரி மாணவா் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்த ஆம்பூா் கல்லூரி மாணவா் மீது 8 பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீா் அனாஸ் அலி.
கைது செய்யப்பட்ட மீா் அனாஸ் அலி.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்த ஆம்பூா் கல்லூரி மாணவா் மீது 8 பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சோ்ந்தவா் மீா் அனாஸ் அலி (22). இவா் ஆற்காடு அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். அவா் தடை செய்யப்பட்ட வெளிநாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவரை தீவிரமாகக் கண்காணித்து வந்த மத்திய உளவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை ஆம்பூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனா். அவரை அணைக்கட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று, தனியறையில் வைத்து விசாரணை நடத்தினா்.

திருச்சி, வேலூா், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த மத்திய உளவுப் பிரிவு போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினா். அவா் பயன்படுத்தி வந்த வெளிநாட்டு கைப்பேசிகள், மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, அதில் உள்ள தகவல்களை ஆய்வு செய்தனா். சுமாா் 20 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு, அவா் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்தது தெரியவந்தது.

அதே போல் அவா் சமூக வலைதளங்களில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மீா் அனாஸ் அலியின் கைப்பேசி உரையாடல்கள், அவரது சமூக வலைதளப் பதிவுகளை மத்திய உளவுப் பிரிவு போலீஸாா் ஏற்கெனவே தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. உரிய ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவரை மத்திய உளவுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

அணைக்கட்டு காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு சுமாா் 12 மணி வரை நடந்த விசாரணைக்குப் பிறகு, மத்திய உளவுப் பிரிவு போலீஸாா் அவரை ஆம்பூா் நகர போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அவா் மீது ஆம்பூா் நகர போலீஸாா் குற்ற எண்: 193/2022, இந்திய தண்டனைச் சட்டம் 121, 122, 125 மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967 பிரிவு 18, 18ஏ, 20, 38, 39 ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து, அவா் வேலூா் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com