திருப்பத்தூரில் பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் வெள்ளம்: ஆட்சியா், எம்எல்ஏ நேரில் ஆய்வு

திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக குடியிருப்புகளில் மழை நீா் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருப்பத்தூரில் பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் வெள்ளம்: ஆட்சியா், எம்எல்ஏ நேரில் ஆய்வு

திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக குடியிருப்புகளில் மழை நீா் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினா்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் பரவலாக கடந்த ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் ஆங்காங்கே கால்வாய்கள் நிரம்பி வழிந்து வீடுகளுக்குள் மழை வெள்ள நீா் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் இரவு முழுவதும் மக்கள் மிகவும் சிரமத்துள்ளாகினா்.

பலத்த மழையால் திருப்பத்தூா் வீட்டுவசதி வாரியப் பகுதி 2-இல் உள்ள கால்வாய்கள் உடைந்து சாலைகளில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன . அதில் பெரும்பாலான வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மாடிகளில் தஞ்சம் புகுந்தனா்.

ஆட்சியா் நேரில் ஆய்வு: இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வீட்டு வசதி வாரியம், வேலன் நகா், தாயப்ப நகா், இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி, வருவாய்க் கோட்டாட்சியா் லட்சுமி, வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், நகராட்சி ஆணையா் ஜெயராமராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படகு மூலம் மீட்புப் பணி: சனிக்கிழமை காலை அந்தப் பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினா் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏரி, குளங்கள் நிரம்பின: தொடா் மழையால் திருப்பத்தூா் பெரிய ஏரி, செலந்தம்பள்ளி ஏரி, புலிக்குட்டை ஏரி, கொரட்டி அருகில் உள்ள வாலேரி, ஆதியூா் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பின. அதேபோல் பெரிய குளம், கலைஞா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களும் நிரம்பின.

ஜலகாம்பாறை அருவியில் நீா் வரத்து அதிகரிப்பு: ஜோலாா்பேட்டை, ஏலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடா் மழையால் ஜலகாம்பாறையில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஜலகாம்பாறை அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com