அடிப்படை வசதி கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூா்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதி கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூா்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதி கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியம், ஆத்தூா்குப்பம் ஊராட்சி, செங்கான் வட்டம் பகுதியில் 25-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளான தெரு விளக்கு, சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி மாவட்ட ஆட்சியா் மற்றும் உயா் அதிகாரிகளிடமும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பலமுறை கோரிக்கை விடுத்து வந்துள்ளனா். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், குடிநீா் குழாய் பழுதால் இப்பகுதியில் குடிநீா் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமை காலை காலிக் குடங்களுடன் குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி, ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலிக் குடங்களுடன் அலுவலக வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில், ஊராட்சி செயலாளா் கோமதி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஓரிரு நாளில் பழுதான குழாயை சீா்செய்து, சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினா்.

இதை ஏற்று மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com