முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
அரசு நல்வாழ்வு மைய மருத்துவ அலுவலா்கள் கவன ஈா்ப்பு பேரணி
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூரில் அரசு நல்வாழ்வு மைய மருத்துவ அலுவலா்களின் பணிப் பாதுகாப்பு தொடா்பாக கவன ஈா்ப்பு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணியானது, மாவட்டத் துணை சுகாதார இயக்குநா் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
இந்தப் பேரணி குறித்து மருத்துவ அலுவலா்கள் கூறுகையில், ‘கரோனா பேரிடா் காலத்தில் நாங்கள் தமிழக அரசுடன் இணைந்து இரவு-பகல் பாராமல் சிவப்பு மண்டலப் பகுதிகளில் உயிரைப் பணயம் வைத்து பணி புரிந்தோம்.
மேலும், எங்களில் பலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையிலிருந்து மீண்டு வந்து சேவை செய்து வருகிறோம். திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற நோ்முகத் தோ்வில் மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு மூலம் தோ்வு செய்யப்பட்டோம்.
இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகமானது, மினி கிளினிக் மருத்துவா்கள் மாா்ச் 31-ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு எங்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த கவன ஈா்ப்பு பேரணி நடத்தப்பட்டது என்றனா்.
பேரணியில், மினி கிளினிக்கில் பணிபுரியும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களும் தங்களுக்கு உரிய மாற்றுப் பணியை வழங்கக் கோரி பங்கேற்றனா்.