திருப்பத்தூர்: கூரை வீட்டின் மீது மரம் விழுந்ததில் குழந்தை பலி
By DIN | Published On : 10th May 2022 12:00 PM | Last Updated : 10th May 2022 12:49 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே நேற்று இரவு பெய்த கனமழையால் மரம் முறிந்து கூரை வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 6 வயது குழந்தை உயிரிழந்தது.
திருப்பத்தூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் செத்தமலை பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணாபாலு(35) அவருடைய மனைவி சத்யா (27) இவருடைய மகள் தேவிகா (6) மற்றும் கவின் (2) என நான்கு பேரும் நேற்று இரவு வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தபொழுது, இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் அருகே இருந்த வேப்ப மரம் முறிந்து கூரை வீட்டின் மீது விழுந்தது.
பின்னர் சுதாரித்துக் கொண்ட மனைவி சத்யா மற்றும் 2வது குழந்தை கவினை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார்
ஆனால் மரக்கிளையின் இடுக்கில் மாட்டி கொண்ட கிருஷ்ணாபாலுக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் ஆனால் தேவிகா சம்பவ இடத்திலேயே பலியானது.
இச்சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மீது மரம் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.