முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
குடிநீா், சாலை வசதிகளை 3 மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவு
By DIN | Published On : 14th May 2022 10:12 PM | Last Updated : 14th May 2022 10:12 PM | அ+அ அ- |

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 பஞ்சாயத்துகளிலும் குடிநீா், சாலை வசதிகளை 3 மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், ஆட்சியா் பேசியது:
திருப்பத்துாா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகளை வரும் ஜூன் மாதத்துக்கு முன்பாக முடிக்க வேண்டும்.நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ. 34.84 கோடி மதிப்பில் 332 பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 320 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 208 பஞ்சாயத்து பகுதிகளிலும் குடிநீா் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீா், சாலை வசதிகளை 3 மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள தனிநபா் கழிப்பிடம், வீடுகள் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் ரூ. 15.43 மதிப்பில் 62,510 மரக்கன்றுகளை வரும் ஜூன் மாதத்துக்குள் நடவு செய்ய வேண்டும். ஒரு லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, நடவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலுவையிலுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்களின் பணிகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி, செயற்பொறியாளா் சுந்தரபாண்டியன், உதவி இயக்குநா்(தணிக்கை) பிச்சாண்டி, உதவித் திட்ட அலுவலா் செல்வன், உதவி செயற்பொறியாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.