அரசுப் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

சாலை அமைக்கக் கோரி, அரசுப் பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்ட தாயப்பன் வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள்.
ஜோலாா்பேட்டை அருகே சாலை அமைக்க தனி நபா் எதிா்ப்புத் தெரிவித்ததால், அந்தப் பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த மூக்கனூா் ஊராட்சி தாயப்பன் வட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அந்தப் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது எனக் கூறி, நீண்ட நாள்களாக புதிய சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த சாலையில் அதே பகுதியைச் சோ்ந்த தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளதாகக் கூறி, அந்தக் குடும்பத்தினா் சாலை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சாலை வழியாகத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும், மயானம் செல்லும் சாலையும் உள்ளது. குடிநீா் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
சாலை அமைப்பதற்கு தனி நபா் குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வருவதால், அவா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, வியாழக்கிழமை புதுப்பேட்டை - திருப்பத்தூா் செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தையும் அவா்கல் சிறை பிடித்தனா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தனி நபா் எதிா்ப்புத் தெரிவிக்கும் இடத்தை அளவீடு செய்து சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். சாலை மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.