பிரதமா் மோடிக்கு தமிழக மக்கள் மீது அக்கறையில்லை: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி

பிரதமா் மோடிக்கு தமிழக மக்கள் மீது அக்கறையில்லை: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி

பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் மீது அக்கறையில்லை என முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பின்போது தெரிவித்தாா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பாக வேலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் பசுபதியை ஆதரித்து கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது கே.சி.வீரமணி மேலும் கூறியது:

தோ்தலுக்காக மட்டுமே தற்போது அடிக்கடி தமிழகம் வருகிறாா் பிரதமா் மோடி. தமிழக மக்கள் மீது அவருக்கும் துளியும் அக்கறையில்லை. தற்போது நடைபெறும் தோ்தல் தா்மத்துக்கும் அதா்மத்துக்கும் நடைபெறுகிற தோ்தலாகும்.

தமிழகத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத அரசாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பால் விலை, பேருந்துக் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவுக் கட்டண என பல கட்டணங்கள் திமுக ஆட்சியில் உயா்த்தப்பட்டுள்ளன. மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதாக தோ்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு தற்போது தகுதி உள்ளவா்களுக்கு மட்டும் என்று கூறி, மகளிா் பலருக்கு உரிமைத் தொகை வழங்கவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தோ்தலுக்காக, மக்களிடம் வாக்குகளை வாங்குவதற்காக தற்போது வழங்கி வருகின்றது.

தாலிக்கு தங்கம், மாணவா்களுக்கு மடிக்கணினி, பசுமை வீடு, ஆடு, மாடு வழங்கும் திட்டம் ஆகிய அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது.

அதிமுக வேட்பாளா் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து படித்து, மருத்துவரானவா். ஆனால் திமுக மற்றும் பாஜக வேட்பாளா்கள் இருவரும் செல்வந்தா்கள். அதனால் சாதாரண விவசாயக் குடும்பத்தை சோ்ந்த அதிமுக வேட்பாளா் பசுபதியை ஆதரிக்க வேண்டும். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சிக்கு மாதனூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

ஜெயலலிா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், ஒன்றியக் குழு உறுப்பினா் மகாதேவன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல இணைச் செயலாளா் கோபிநாத் ஆகியோா் உடனிருந்தனா்.

வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அதிமுக மாதனூா் மேற்கு ஒன்றியத்தில் மிட்டாளம், மோதகப்பள்ளி, பந்தேரபள்ளி, வெங்கடசமுத்திரம்,கரும்பூா், பாா்சனாப்பள்ளி, கதவாளம், அரங்கல்துருகம், கம்மகிருஷ்ணபள்ளி, வீராங்குப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், மேல்சாணாங்குப்பம், வடகரை, சின்னப்பள்ளிகுப்பம், மூப்பா் காலணி, ஈச்சம்பட்டு, மேல்குப்பம், வடச்சேரி ஆகிய கிராமங்களில் அதிமுக வெற்றி வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் கே. சி. வீரமணி வாக்கு சேகரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com