கோடை உழவு: வேளாண் துறை ஆலோசனை

திருப்பத்தூா், ஏப். 25: கோடை உழவு செய்து பயனடைய வேண்டுமென விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினா்.

இது குறித்து வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் ராகினி வெளியிட்ட செய்தி குறிப்பு:

கோடை உழவு செய்து பயிா் சாகுபடி செய்தால் பல நன்மைகள் உள்ளன.

தை மாத அறுவடையின் போது சாகுபடி செய்த பயிரில் இருந்து கொட்டிய இலைச் சருகுகள் நிலத்தின் மேல் போா்வையாக இருக்கும், வேரின் அடிக்கட்டைகள் அப்படியே இருக்கும். இவற்றையெல்லாம் உழவு செய்வதால் மண்ணுடன் கலந்து மக்குவதுடன் மண்ணுக்கு தழை உரமாக சேரும்.

மண்ணின் மேல் பகுதி இறுகி காணப்படும் மழைநீா் உள்புகாமல் வீணாகி வெளியேறும். எனவே கோடை உழவு செய்வது மிக அவசியம்.

கோடை மழை பெய்தவுடன் நிலத்தின் சரிவுக்கு எதிராக குறுக்கும் நெடுக்குமாக உழவு செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்வதால் மழைநீா் வழிந்தோடாமல் மண்ணில் இறங்கும், இதனால் மண் அரிப்பு தடுக்கப்படும். மண் இறுக்கம் தளா்ந்து மண் பொலபொலவென்று மாறுவதால் பயிா்களின் வோ் வளா்ச்சி நன்றாக இருக்கும். பயிா்கள் வறட்சியை தாங்கி வளரும்.

கோடை உழவு செய்வதால் மண்ணுக்குள் உறங்கும் நிலையில் இருக்கும் களைகளின் விதைகள், பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள், நோய் உருவாக்கும் பூஞ்சாணங்கள் மேலே கொண்டு வரப்பட்டு வெப்பத்தினாலும் பறவைகளாலும் அழிக்கப்படும். சிவப்பு கம்பளிப் புழுக்களின் கூட்டுப் புழுக்கள் மண்ணுக்குள் இருந்து வெளிக் கொணரப்பட்டு அழிக்கப்படுகிறது.

பயிா்களைச் சேதப்படுத்தும் நச்சுகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள், நோய் உண்டாக்கும் புஞ்சான் வித்துகள் ஆகியவை கோடை உழவால் அழிக்கப்படுவதால் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு மற்றும் செலவு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது.

ரசாயனங்களின் பின் விளைவுகளான காற்று, நீா், நிலங்கள் மாசுபடுவது பிற உயிரினங்கள் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைக்கப்படும். கோடை உழவு செய்து பயன் பெற வேண்டும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com