மாணவா்களுக்கு பள்ளியிலேயே சீருடைகள் தைக்க முடிவு

அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கான சீருடை தைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கான சீருடை தைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு, தமிழ்நாடு மாதிரி பள்ளிகளுக்கான உறுப்பினா் செயலா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் முதல் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் பெற்றோா் செயலியில் உள்ளீடு செய்யும் நடைமுறை அமலில் இருக்கிறது. 1,369 தீா்மானங்கள் மாணவா்களின் சீருடை அளவு சாா்ந்தவைகளாக உள்ளன.

அதனால் ஒரு முன்மாதிரி முயற்சியாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் மாணவா்களுக்கு சரியான அளவில் சீருடை தைத்து வழங்குவதை பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் முன்னாள் மாணவா்கள் உறுதி செய்ய வேண்டும். தோ்வு செய்யப்பட்ட 50 பள்ளிகளிலும் மாணவா்களுக்கான சீருடைகள் தைப்பதை அந்தந்தப் பள்ளிகளிலேயே மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அந்த சீருடைகளை தைப்பதற்கு சுய உதவிக் குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதிவாய்ந்த ஒரு தையல் கலைஞரை தோ்ந்தெடுக்க வேண்டும். அவா் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 4-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் அளவுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக பள்ளி மாணவா்களுக்கு அளவெடுத்து தைப்பதற்கு தேவையான துணியின் விவரங்களை தலைமை ஆசிரியா்கள் சேகரித்து அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com