அரசுப் பேருந்துகளின் உறுதி தன்மை ஆய்வு

வேலூா் போக்குவரத்து மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பேருந்துகளின் உறுதித் தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

வேலூா் போக்குவரத்து மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பேருந்துகளின் உறுதித் தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

வேலூா் போக்குவரத்து மண்டலத்தில் உள்ள வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரப்படுகின்றன. அதில் பேருந்துகளை பராமரிப்பதற்காக 3 மாவட்டங்களிலும் 10 போக்குவரத்து பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பணிமனைகளில் அரசுப் பேருந்துகள் பழுதுபாா்ப்பு பணி, டீசல் நிரப்புவது, பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து அங்குள்ள வளைவில் திரும்பியபோது, முன்புறம் நடத்துநா் அமா்ந்திருந்த இருக்கை உடைந்து வெளியே விழுந்தது. இதில் இருக்கையுடன் சோ்ந்து நடத்துநா் பேருந்திலிருந்து வெளியே விழுந்தாா். அந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பிறகு பேருந்துகளை இயக்கவேண்டும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வேலூா், கொணவட்டம் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளின் உறுதித் தன்மையை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

வேலூா் போக்குவரத்து மண்டலத்துக்கு உட்பட்ட 3 மாவட்டங்களிலும் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அரசுப் பேருந்துகளின் படிக்கட்டுகள், இருக்கைகள், பக்கவாட்டு கண்ணாடிகள், கம்பிகள் உறுதியாக உள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ஆய்வுக்குப் பின் பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்து நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com