ஆலங்காயம்-திருப்பத்தூா் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆலங்காயம் நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சிகுட்பட்ட ஆலங்காயம்-திருப்பத்தூா் சாலையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சாலை ஓரங்களை ஆக்கிரமித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
மேலும், ஆலங்காயம் பங்கூா் பகுதியில் ஏரியின் வளைவு பகுதியில் சாலையையொட்டி சிலா் வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைகின்றனா். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நெடுஞ்சாலைதுறையினரிடம் பொதுமக்கள் பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், நெடுஞ்சாலையையொட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சிக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கும், விபத்து ஏற்படும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.