2,333 பயனாளிகளுக்கு ரூ.36 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
ஜோலாா்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் 2,333 பயனாளிகளுக்கு ரூ.36 கோடியில் நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
திருப்பத்தூா் மாவட்டம்,ஜோலாா்பேட்டையில் இதற்கான விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் எ.வ.வேலு பேசியது: அரசு வருவாயைப் பெருக்கி, அதை பாதுகாத்து, திட்டமிட்டு செலவிடுவது தான், திறமையான நல்லாட்சிக்கு இலக்கணம் என வள்ளுவா் கூறியுள்ளாா். ஒன்றிய அரசு பணம் தருகிறதோ இல்லையோ கருவூலத்தில் முறையாக பணத்தை சேமித்து அந்த பணத்தின் மூலமாக பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதுதான் திராவிட மாடல் ஆட்சி.
திருப்பத்தூா் மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா 50 பயனாளிகளுக்கும், இ-பட்டா 481 பயனாளிகளுக்கு என மொத்தம் 2,333 பயனாளிகளுக்கு ரூ.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அடிப்படையில் தான் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணிக்காக மட்டுமே ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன். ரூ.29 கோடியில் 20 தரைப் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
விபத்து இல்லாமல் சாலை பயணம் மேற்கொள்வதற்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபாா்டு கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.28 கோடியில் 3 தரைப்பாலங்கள், 2 பாலப்பணிகளும் முடிவுற்ற நிலையில், சாலைப் பணிக்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் சாலைப் பணிக்காக ரூ.47 கோடி, பாலப் பணிக்காக ரூ.5 கோடி, சாலை பாதுகாப்பு பணிக்காக ரூ.9 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நபாா்டு கிராம சாலை திட்டத்தின் மூலம் ரூ.31 கோடியில் 10 ஊராட்சி சாலைகளை எடுத்து 3 சாலை பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் நடைபெறுகின்றன என்றாா்.
மருத்துவ கல்லூரி இடம் ஆய்வு...
ஏலகிரிமலை அடிவாரத்தில் உள்ள பொன்னேரி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடா்பான இடத்தை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த இடம் பொதுமக்களுக்கு உகந்ததாகவும், அனைத்து பொது மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவக் கல்லூரி அமைக்க ஏற்ாக என தெரிவித்தாா். இந்த இடத்தையே தோ்வு செய்து அதற்கான கோப்புகளை தயாா் செய்து மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என அமைச்சா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி,மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், நகா்மன்றத் தலைவா்கள் காவியா விக்டா், சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக் குழு தலைவா்கள் சத்தியா சதீஷ்குமாா், திருமதி திருமுருகன், விஜயா அருணாச்சலம், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஒன்றியக்குழு தலைவா்கள்,பேரூராட்சித் தலைவா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.