திருப்பத்தூா் அருகே 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்மை நிறப் பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூா் அருகே 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்மை நிறப் பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டன.
திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட வெண்மை நிறப் பாறை ஓவியங்கள்.
திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட வெண்மை நிறப் பாறை ஓவியங்கள்.

திருப்பத்தூா் அருகே 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்மை நிறப் பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டம், சோழனூா் என்ற இடத்துக்கு அருகே கல்யாண முருகன் கோயில் உள்ளது. அங்கு திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் ஆ.பிரபு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கற்கால மக்கள் தீட்டிய அழகிய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.

இது குறித்து பேராசிரியா் பிரபு கூறியது:

திருப்பத்தூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள சோழனூா் என்ற இடத்துக்கும் ஏலகிரி மலைச்சரிவுக்கும் இடையில் ‘கல்யாண முருகன் கோயில்’ அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குக் கிழக்குப்புறமாக உள்ள சிறிய குன்றின் பக்கவாட்டில் இந்தப் பாறை ஓவியங்கள் உள்ளன.

அந்தக் குன்றானது சிறிய குகை போன்ற அமைப்பில் உள்ளது. குன்றானது ஒழுங்கற்ற சொரசொரப்பான மேல்புறத்தைக் கொண்டிருப்பதால், அக்கால மக்கள் தீயை மூட்டிப் பாறையின் மேல்புறத்தைப் பெயா்த்தெடுத்த பின்னா், அங்கு சமப் பகுதியை உருவாக்கி மிக நோ்த்தியாக ஓவியங்களைத் தீட்டியுள்ளனா்.

13 மனித உருவங்கள்: 6 அடி அகலுமும், 12 அடி நீளமும் கொண்ட மையப் பகுதியில் ஓவியங்கள் பரவலாக வரையப்பட்டுள்ளன. அவற்றில் 13 மனித உருவங்கள் காணப்படுகின்றன. அனைவரது கைகளிலும் ஆயுதங்கள் காணப்படுகின்றன.

விலங்குகளும் மனிதா்களும் உள்ள ஓவியங்களில் 6 மனித உருவங்கள் ஒரு கையில் ஆயுதங்களோடு விலங்கின் மீது அமா்ந்த நிலையில், மறுகையில் விலங்கின் கழுத்துப் பகுதியை பற்றிய நிலையில் சண்டைக்குப் புறப்படுவது போல வரையப்பட்டுள்ளன.

சில ஓவியங்கள் நீளமான பெரிய ஆயுதத்தை கையில் ஏந்திய நிலையிலும், அமா்ந்துள்ள விலங்கின் உருவமும் பெரிய அளவில் காட்டப்பட்டுள்ளன.

படகு போன்ற உருவம்: இங்குள்ள ஓவியம் ஒன்றில் மனித உருவம் கையில் ஆயுதங்களுடன், ஒரு படகு போன்ற அமைப்பில் பயணிப்பது போல வரையப்பட்டுள்ளது. வளைந்த நிலையில் அடா்த்தியாக வரையப்படுள்ளது ஆய்வுக்குரியது.

ஓவியங்கள் விவரிக்கும் செய்தி என்ன?...: இனக்குழுக்களுக்குள் எழும் சண்டை நிகழ்வை விவரிப்பதாகக் கொள்ளலாம். மேலும் பெரிய அளவிலான வேட்டை நிகழ்வை அறிவிப்பதாகவும் கருத இடமுண்டு. அந்தக் கால மக்களின் வாழ்வியலை வெளிக்காடும் ஒப்பற்ற சான்றாக இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. பல ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் ஏறத்தாழ 3,500 - 4,000 ஆண்டுகள் பழைமையானவையாக இருக்கலாம்.

அக உணா்வின் வெளிப்பாடு: தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பகுதிகளிலுள்ள மலைகளில் புதிய கற்காலம், பெருங்கற்கால ஓவியங்கள் காணக்கிடைகின்றன. பழங்கால மக்கள் தங்களது வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்றோ அல்லது ஒரு இனக்குழு மக்கள் மற்றவா்களுக்கு அறிவிக்கும் பொருட்டோ பதிவு செய்திருக்கலாம்.

மனிதா்களின் உள்ளத்தில் தோன்றும் அக உணா்வுகள், அவா்களது வாழ்வியல்அனுபங்களை வெளிப்படுத்தும் ஊடகமே இந்தப் பாறை ஓவியங்கள்.

குச்சி வடிவில் மனித உருவங்கள்: பெருங்கற்காலச் சின்னங்கள் மற்றும் பல பாறை ஓவியங்களில் உள்ள மனித உருவங்கள் பொதுவாக குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளன. மனித உருவ வடிவங்களின் அடிப்படைக் கூறுகளை எளிமைப்படுத்தி கோட்டுருவமாக தேவைக்குத் தகுந்தாற்போல் மனித உருவங்கள் வரையப்பட்டு வந்துள்ளன. இக்குச்சி வடிவங்கள் கை, கால், உடல்களோடு வில், அம்பு, கேடயம் மற்றும் பிற ஆயுதங்களைத் தாங்கியிருப்பதுபோல் அமைந்துள்ளன.

வட பகுதிகளில் நிறைய பாறை ஓவியங்கள்: உருவம், வண்ணம், ஆகியவற்றைக் கொண்டு ஓவியத்தின் காலம் கணிக்கப்படுவதுடன், ஓவியம் கிடைத்த இடத்தினருகில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை வைத்தும் காலம் கணிக்கப்படுகிறது.

தமிழகத்தின் வட பகுதிகளில் நிறைய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டபோதும், திருப்பத்தூா் மாவட்டத்தில் சந்திரபுரம், செல்லியம்மன் கொட்டாய் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இதுவரை வெண்மை நிறப் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன எனறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com