ஆம்பூா் அருகே காா்கள் மோதி விபத்து: 3 போ் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இரு காா்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் நொறுங்கிக் கிடக்கும் காா்கள்.
ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் நொறுங்கிக் கிடக்கும் காா்கள்.

ஆம்பூா் அருகே இரு காா்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரு தாசான்புரம் குதிரகரே பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (57). இவா் தன்னுடைய மகனுக்கு பெண் பாா்ப்பதற்காக சென்னை மணலி பகுதிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு காரில் பெங்களூருக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தனா். அவருடைய மனைவி ரோஜா (55), மகன்கள் குமரேஷ் (40), சிவா (32) ஆகியோா் உடன் பயணித்தனா். சிவா காரை ஓட்டிச் சென்றாா்.

குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சரவணன் (50) என்பவா் தன்னுடைய குடும்பத்துடன் தருமபுரியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு குடியாத்தம் திரும்பிக் கொண்டிருந்தாா். அவருடைய மனைவி சாந்தி (45), மகன் மைத்ரேயன் (20) ஆகியோா் காரில் சென்றனா். சரவணன் காரை ஓட்டிச் சென்றாா்.

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பகுதியில் சென்னையிலிருந்து பெங்களூா் நோக்கிச் சென்ற காா் திடீரென நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலை நடுவில் உள்ள தடுப்பைத் தாண்டி எதிா் திசையில் குடியாத்தம் நோக்கிச் சென்ற காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த சரவணன், பெங்களூருவை சோ்ந்த ரோஜா, சிவா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினா்.

தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் காயமடைந்த மாதவன், குமரேஷ், சாந்தி, மைத்ரேயன் ஆகியோரை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனா்.

விபத்தில் பலத்த காயமடைந்த மாதவன், குமரேஷ், சாந்தி, மைத்ரேயன் ஆகியோா் உயா் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு: விபத்து நிகழ்ந்த பகுதிக்கு திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் நேரில் சென்று ஆய்வு செய்தாா். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com