நிகழாண்டு ஏலகிரி கோடை விழா நடைபெறுமா? சுற்றுலாப் பயணிகள் ஆவல்

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறாத ஏலகிரி கோடை விழா நடப்பாண்டு நடைபெற வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறாத ஏலகிரி கோடை விழா நடப்பாண்டு நடைபெற வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது ஏலகிரி மலை. திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத் தலம் ஏலகிரி மலை. இங்கு, தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் தங்கி கண்டுகளித்துச் செல்கின்றனா். இங்கு படகு குழாம், இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா உள்ளிட்டவை இருப்பதால் வார விடுமுறை தினங்களில் கூட பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் இயற்கை பூங்கா, செயற்கை நீரூற்று, படகு குழாம், கோயில்கள் உள்ளன என்பதாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதாலும் பயணிகள் பெரிதும் இந்த சுற்றுலாத் தலத்தை விரும்புகின்றனா். 5 ஆண்டுகளுக்கு முன்... ஏலகிரியில் கோடை விழா கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதையடுத்து, கரோனா தொற்று, விழாவுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் கோடை விழா நடைபெறவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஏலகிரி மலையில் கோடை விழா நடத்துவது குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து தொடா் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நடப்பாண்டாவது ஏலகிரியில் கோடை விழா நடைபெற வேண்டும் என சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையுடன் இந்தப் பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com