ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றிய ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

வாணியம்பாடி அருகே தோல் கழிவுநீரை பாலாறு கிளையாற்றில் வெளியேற்றிய ஆலையின் மின் இணைப்பை துண்டித்து மாசுக் கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தோல் தொழிற்சாலையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தொழிற்சாலையில் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்யாமல் ரகசியமாக குழாய் அமைத்து பாலாறு கிளையாற்றில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இது போன்ற சம்பவத்தில் ஈடுபடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் மாவட்ட பொறியாளா் கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com